நாம் கோவிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிடும்போது என்ன வரம் கேட்க வேண்டும்? எப்படி வேண்டுதல் வைக்க வேண்டும்? என்று தெரியாமல் அவரவர்க்கு தெரிந்த அளவு மட்டும் கேட்டு சாமி கும்பிடுகிறார்கள். நல்ல புத்தியக் கொடு, செல்வ செழிப்பக் கொடு, நோய் நொடியில்லாத வாழ்வைக் கொடு என்பது தான் பெரும்பாலானோரின் வேண்டுதலாக இருக்கும்.
ஒரு தாய்க்குத் தான் குழந்தைக்கு எப்போது பசிக்கும் என்று தெரியும். அப்போது அவளே கண்டிப்பாக உணவு தருவாள். ஆனால் இது குழந்தைக்குத் தெரியாது அல்லவா? அதனால் அது லேசாகப் பசிக்கும் முன்பே அழத் தொடங்கி விடும். உடனே தாய் அதற்கு உணவு தருவாள்.
அப்போது குழந்தைக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஓஹோ நாம் அழுததால்தான் நமக்கு தாய் உணவு தந்து இருக்கிறாள் என்று நினைத்து ஆனந்தப்படும். அது போல தான் பக்தர்களும். தான் வேண்டுதல் வைத்து அது நிறைவேறிவிட்டால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவார்கள்.
இறைவனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்கே தெரிவதில்லை. கடவுளே திடீரென முன் தோன்றி என்ன வரம் வேண்டுமப்பா என்று கேட்டால் நமக்கே ஒன்றும் தெரியாது. கொஞ்ச வரமா இருக்கு…நாம கேட்க வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கு. எதைக் கேட்பது என்றே தெரியாமல் குழம்பிப் போய் விடுவோம். அது மட்டுமல்லாமல் நா தழுதழுத்து விடும். இது கடவுளை நேரில் பார்த்ததால் வந்த ஆனந்தப்பெருக்கு.
பெரிய பெரிய ஞானியர்கள் கூட கடவுளை நேரில் பார்த்ததும் என்ன கேட்பது என்று தெரியாமல் உள்ளம் உடைந்து குழைந்து போயிருக்கின்றனர். ஞானியர்களுக்கே இந்த நிலைமை என்றால் நமக்கு என்ன நிலைமை இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
முதலில் நமக்கு எது தேவை என்பதை நம்மாலே தீர்மானிக்க முடியாது. இன்று தேவையான ஒன்று நாளை நமக்கு பிரச்சனையாகக் கூடும். இது நமக்குத் தெரிவதில்லை. அது கடவுளுக்குத் தான் தெரியும். நாம் வேண்டும் சில காரியங்கள் அதனால் தான் கைகூடாமல் போய்விடுகிறது.
இதனால் கடவுள்கிட்ட நாம வேண்டுனது கிடைக்கல என்று மனம் நொந்து விடுகிறோம். இவர்களால இந்தப்பிரச்சனை உண்டாகும் என்பதைத் தெரிந்து தான் கடவுள் தட்டிக்கழித்துள்ளார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இறைவனுக்கு நமக்கு என்ன தேவை என்பதும் அதை எப்போது தர வேண்டும் என்பதும் தெரியும்.
நாம் என்ன வேண்டணும்னு முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் கொஞ்சம் பின்னோக்கி நம் முன்னோர்களை நாடிச் செல்வோம். சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயத்திலிருந்து சிவபெருமானுக்குத் தொண்டு செய்கிறார். அம்பிகைக்கு மலர் பறிக்க வந்த அனிந்தினி, கமலினி என்ற இரு பெண்களையும் ஒரு வினாடி விரும்புகிறார்.
பின் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து ஆண்டவனைத் தொழ மலர்களைத் தொடுக்கிறார். சிவபெருமான் கேட்டார் சுந்தரா நந்தவனத்தில் என்ன கண்டாய்? என்று கேட்டார். சுந்தரர் சிவபெருமானே நான் தவறு செய்து விட்டேன்…என்றார். என்ன தவறு செய்தாய்? பெண்களை விரும்பினாய் அவ்வளவு தானே என்றார் சிவன்.
ஆனால் இது கைலாயம். காமனை வென்ற இடம். இங்கு தவறு செய்ய முடியாது. பூலோகத்திற்குப் போய் அந்த இரு பெண்களையும் மணந்து பின் என்னை சரணடைவாய் என்றார். உடனே சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மகிழ்ச்சி வந்து பூலோகத்திற்கு செல்லத் தயாராகிறார். அப்போது அவர் இறைவனிடம் ஒரு வரம் வேண்டும் என்று கேட்கிறார். என்ன வரம் கேள் என்கிறார் இறைவன்.
சுந்தரர் இறைவா நான் பூலோகத்தில் தவறான வழியில் நான் செல்லும்போது என்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் எனக் கேட்டார். உடனே அந்த வரம் அவருக்குக் கிடைக்கிறது. பூலோகம் செல்கிறார். 16 வயது அடைந்ததும் அங்கு ஒரு பருவப்பெண்ணை மணம் முடிக்கத் தயாராகிறார். இறைவன் சும்மா விடுவாரா? தான் தவறான வழியில் செல்கையில் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று வரம் கொடுத்துள்ளாரே.
அதன்படி சுந்தரர் வந்த வேலையை அல்லவா செய்ய வைக்க வேண்டும் என்றெண்ணி தன்னைப் பாட வைக்கிறார். பின்னர் சுந்தரர் அவரைப் புகழ்ந்து பாட அவருக்கு ஒரு காலம் கனிந்து வருகிறது. அப்போது அனிந்தினி, கமலினி என்ற இருபெண்களும் பருவமடைந்து சுந்தரரை மணக்கின்றனர். பின்னர் இறைவனுக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளை எல்லாம் செய்து முடித்ததும் சுந்தரர் இறைவனை சரணடைகிறார்.
இந்தக்கதையிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், இறைவனிடம் நாம் எதைத் தெளிவாகக் கேட்க வேண்டும் என்பதுதான். எனக்கு அதைக் கொடு. இதைக்கொடு என்று கேட்பதை விட, சுந்தரர் கேட்ட மாதிரி இறைவா நான் தவறான வழியில் செல்கையில் என்னைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டும் என்றே கேட்கலாம். அதிலேயே எல்லாம் அடங்கி விடுகிறது. நமக்கு என்ன தரவேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். அதை எல்லாம் சுபமாய் தருவார்.