கார்த்திகை தீபத்திருவிழா வரும் வெள்ளிக்கிழமை 13.12.2024 அன்று வருகிறது. இந்த நன்னாளில் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது, விரதம் இருப்பது எப்படி என்று பார்ப்போம்.
சிவபெருமானை வழிபடக்கூடிய பல அற்புதமான திருநாளில் ஒன்று இந்தத் தீபத்திருநாள். இது முருகப்பெருமானுக்கும் விசேஷமானது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகருக்கு கார்த்திகேயன் என்றும் ஒரு பெயர் உண்டு.
அதனால் கார்த்திகை என்ற நட்சத்திரத்தில் முருகப்பெருமானை மாதந்தோறும் வழிபாடு செய்யலாம். இதற்கு பலன்கள் நிறைய உண்டு.
அந்தவகையில் கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்துக்கு எவ்வளவு சிறப்புன்னு நாம் உணர வேண்டும். நான் என்ற ஆணவத்தை அழிக்கும்போது தான் உலகில் பிரச்சனையே இல்லாமல் போகும்.
அடிமுடி காண முடியாத இறைவன்
இது முற்றினால் உலகில் மட்டுமல்ல. குடும்பத்திலும் பிரச்சனை தலைதூக்குகிறது. அந்த ஆணவம் தலைதூக்கும்போது மனிதனை அடக்குவதுதான் இந்த வழிபாடு. இறைவன் அடிமுடி காண முடியாதவராய் உயர்ந்து நின்றார்.
மேலே போய் எப்படியாவது நான் பார்த்துவிடுவேன் என்ற ஆணவத்தோடு பிரம்மா போனார். ஆனா பார்க்க முடியல. அதே போல நாராயணர் கீழே போய் தேடுனாரு. அவராலும் பார்க்க முடியல. இருவருக்கும் அடி முடி காண முடியாதவாறு உயர்ந்து நின்றதால் அந்த மலைக்கு அண்ணாமலை என்று பெயர்.
அண்ணாமலை
‘அண்டுதல்’ என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்க முடியாத மலை என்று பெயர். அந்த மலையின் ரூபமாக இறைவன் ஜோதி பிழம்பாக, அக்கினி சொரூபமாக நின்ற இடம். அதனால் தான் இன்றைக்கும் இந்த திருத்தலம் அக்கினி தலமாக விளங்குகிறது. அந்தக் கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கும்போது அக்கினியின் தன்மையை நாம் உணர முடியும்.
திருக்கார்த்திகை
ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆணவத்தை அழிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் என்பதற்காகத் தான் இந்த திருக்கார்த்திகை தீபத்திருநாள் விரதம்.
இந்த நாளில் நாம் விரதம் இருந்து சிவனையும், முருகப்பெருமானையும் வழிபட வேண்டும். நம் பிரச்சனை என்ன? அதற்கு எப்படி விரதம் இருப்பது என அவரவர் தான் தீர்மானம் பண்ண வேண்டும். பிறரைப் பார்த்து நாம் விரதம் இருக்கக்கூடாது.
விரதம்
எளிமையான உணவுகளாக எடுத்துக்கொண்டு விரதத்தைத் தொடங்கலாம். பரணி நட்சத்திரத்தின் இரவு அன்று எளிமையாக பால், பழம் சாப்பிடுங்க. கார்த்திகை எழுந்ததும் விரதத்தைத் தொடங்குங்க. தலைக்குக் குளிப்பதுதான் முக்கியம். சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் குளிக்க வேண்டாம்.
மாலை 6 மணிக்கு மேல் தான் சாப்பிட வேண்டும். இடையில் தண்ணீர் நிறைய குடிக்கணும். உப்பில்லா உணவும் சாப்பிடலாம். பால் சாதம், தயிர் சாதம் சாப்பிடலாம். இளநீர் குடிக்கலாம். பால் குடிக்கலாம்.
27 விளக்குகள்
மாலையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வீடு முழுக்க தீபம் ஏற்றலாம். தீபத்திருநாள் அன்று அகல் விளக்கில் பஞ்சுதிரி போட்டு எண்ணெய் ஊற்றி ஏற்றுவது விசேஷம். குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். பூஜை அறையில் சற்கோணதீபம் ஏற்றுங்க. ரொம்ப விசேஷம். சரவணபவ என்று கோலம் போட்டு 6 விளக்கு ஏற்றலாம்.
அதேபோல கார்த்திகை தீபம் அன்று வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் தலா 2 தீபம் ஏற்றுங்க. முன்வாசல், பின்வாசல், அடுப்பங்கரை, கழிவறை, பால்கனி, ஸ்டோர் ரூம், மொட்டைமாடி, தோட்டம், கிணறு, தொழுவம், படுக்கை அறை, மாடிப்படி என எல்லா இடங்களிலும் வைக்கலாம். அலுவலகம், கடைகளிலும் ஏற்றலாம். வாசலில் காற்று அடிப்பதால் கொஞ்சமாகத் தீபம் ஏற்றுங்கள்.
முதலில் வாசலில் தீபம் ஏற்றுங்க. அப்புறம் பூஜை அறை, அதன்பிறகு தான் மற்ற இடங்களில் ஏற்றணும். மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றணும்.
அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரரா வர்ற காட்சியைப் பார்த்துட்டுத் தான் தீபம் ஏற்றணும். 3 நிமிஷம்தான் இந்தக் காட்சிக் கிடைக்கும். ஆனந்தமயமாக வருவார். அடுத்த நொடியே திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும். அதன்பிறகு அண்ணாமலைக்கு அரோகரா கோஷம் முழங்கும். மௌன விரதம் இருப்பது விசேஷம். அண்ணாமலைக்கு அரோகரா என சொல்லிவிட்டு மௌனவிரதத்தைக் கலைக்கலாம். அதன்பிறகு தீபம் ஏற்றுங்க.
நடுவில் தெரியாமல் பேசிவிட்டால் சிவாயநமன்னு சொல்லிட்டு மீண்டும் மௌனவிரதத்தை இருக்கலாம்.
நைவேத்தியமாக பொரி வைக்கலாம். அதனுடன் வெல்லம், பொட்டுக்கடலை, தேங்காய், எள்ளு கலந்து உருண்டையாக வைப்பார்கள். வடை பாயசத்துடன் அறுசுவை உணவு படையலும் வைக்கலாம். சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் பாராயணம் பண்ணலாம். பௌர்ணமி, கிருத்திகை ஒன்றாக இணையும்போது தீபத்திருநாள் வருகிறது. கிருத்திகை நட்சத்திரத்தன்று மாலை 6 மணிக்கு மேல் தீபம் ஏற்றலாம். இந்த ஆண்டு பௌர்ணமி இல்லாமல் கிருத்திகை மட்டுமே வருகிறது. 13.12.2024 அன்று காலை 6.51 மணிக்கு கிருத்திகை நட்சத்திரம் ஆரம்பிக்கிறது. 14.12.2024 அன்று காலை 4.56 மணி வரை உள்ளது.
பாஞ்சராத்ர தீபம்
அதனால் 13ம் தேதி மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடலாம். 14.12.2024 அன்று மாலை 4.17 மணி முதல் 15.12.2024 அன்று மாலை 3.13 மணி வரை உள்ளது. 3வது நாளில் பாஞ்சராத்ர தீபம் ஏற்றலாம். நாம் வாழ்வில் எப்படி உயரணும்னு நினைக்கிறோமோ அதை சிவனும், முருகப்பெருமானும் அருள்வார்கள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.