முருகப்பெருமான் அவதரித்த நாளைத் தான் வைகாசி விசாகமாகக் கொண்டாடி வருகிறோம். இன்னொரு விசேஷமான நாள் கார்த்திகை நட்சத்திரம். அவரை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களைக் கொண்டாடும் விதமாக அந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
சிவபெருமான் கடும் தவத்தில் இருந்தார். அப்போது அசுரர்களின் தொல்லை தாங்க முடியாமல் போனது. என்ன செய்வது என தேவர்கள் கலங்கி நின்றனர். சிவபெருமான் தவத்தில் இருக்கிறாரே அவரிடமும் போய் சொல்ல முடியாதே என தவித்தனர். ஆனால் அசுரர்களின் தொல்லை ஒரு கட்டத்திற்கு மேல் அளவு மீறிப்போனது. அப்போது சிவபெருமானிடம் போய் நிற்கின்றனர்.
அதனால் தவம் கலைத்த சிவபெருமான் நடந்தவற்றை அறிந்து கடும் கோபத்தில் தன் நெற்றியில் இருந்து தீப்பொறிகளை சரவணப் பொய்கையில் விழச்செய்தார். அவை குழந்தைகளாக அவதரித்தன. பார்வதி தேவி அந்த 6 குழந்தைகளையும் அரவணைத்தாள். ஆறுமுகக்கடவுளான முருகப் பெருமான் ஆனார். இவர் தான் அசுரர்களை எல்லாம் அழித்தார். தாராகாசுரன், சூரபத்மன், சிங்கமுகனை அழித்தது முருகப் பெருமான் தான்.
இவரை இந்த வைகாசி விசாகத்தில் வணங்குவதால் ஞானம் பெருகும். வெற்றி கிடைக்கும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தை கிடைக்கும். நிலப்பிரச்சனை, சொத்துப்பிரச்சனை, வேலைவாய்ப்பு, திருமணத்தடை ஆகிய பிரச்சனைகளும் விலகும். இவர் ஞானப்பண்டிதர், தகப்பன்சுவாமி, போர் படைத்தளபதி, கடவுளர்களுக்கு எல்லாம் கடவுளர்.
வைகாசி விசாகத்தன்று ஒரு வேளை பால், பழம் மட்டும் சாப்பிட்டு தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைக்கலாம். ஓம் சரவணபவ, ஓம் முருகா என்ற மந்திரத்தை மட்டும் உச்சரித்தாலே போதும். அருகில் உள்ள முருகன் கோவிலுக்குப் போய் வழிபடலாம். அபிஷேகத்திற்கு பால், தேன், சந்தனம், ஜவ்வாதுஎடுத்துச் சென்று கொடுக்கலாம்.
22ம் தேதி முழுவதும் விசாக நட்சத்திரம் இருக்கிறது. ஆனால் புராணப்படி பௌர்ணமி அன்று கூடியிருக்கும் நாளில் தான் முருகப்பெருமான் அவதரிக்கிறார். இந்த விசாக நட்சத்திரம் மே 22ம் தேதி காலை 8.18 மணி முதல் மே 23 காலை 9.43 மணி வரை விசாக நட்சத்திரம் உள்ளது. 23ம் தேதி தானே நமக்கு பௌர்ணமி வருகிறது என்று குழப்பம் வரலாம். முருகப்பெருமான் என்றாலே விசாக நட்சத்திரம் தான். அதனால் இந்த நட்சத்திரம் உள்ள 2 நாள்களும் அதன் நேரம் உள்ள வரை விரதம் இருந்து வழிபாட்டை முடித்துக்கொள்ளலாம்.