இப்பூவுலகில் மனிதனாக பிறந்து விட்டோம். இனி இந்த ஜென்மத்தை நல்லபடியாக வாழ்ந்து கழிக்க வேண்டும் என்பது தான் அதன் தலையாய நோக்கமாக இருக்கும். அதனால் மனிதனாகப் பிறந்தவன் யாருக்கும் எந்த வஞ்சகமும் இல்லாமல், எந்தப் பழியும் நேராமல் வாழத் தொடங்குகிறான்.
பழி, பாவங்களுக்கு அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவனுக்கு நிம்மதி தேடி வருகிறது. அதை ஒரு பொருட்டாகக் கொள்ளாதவனுக்கு வாழ்க்கையில் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் நிம்மதி இல்லாமல் போய்விடுகிறது.
பத்தாயிரம் சம்பாதிக்குற ஒரு நபரிடம் போய் கேளுங்கள். நீங்க வாழ்க்கையில் நிம்மதியா சந்தோஷமா இருக்கீங்களான்னு? இல்லைன்னு பதில் வரும். அவனுக்கு அங்கு தேவை பணமாக இருக்கும். நிறைய பணம் சம்பாதித்தால் நிம்மதியாக வாழலாம் என்ற நினைப்பிலேயே காலம்பூராவும் வாழுவான். இங்கு நிறைய பேர் அப்படி தான் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவே ஒரு லட்சம் சம்பாதிக்கும் ஒரு நபர் நிம்மதியாக இருப்பாரா என்று கேட்டுப் பாருங்கள். அங்கேயும் நிம்மதி இருக்காது. அவரால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்க முடியும். அவருடைய எல்லா ஆசைகளையும் பணத்தை வைத்து நிறைவேற்றி கொள்ளலாம்.
ஆனால் அதெல்லாம் நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்து விடுவதில்லை. எங்காவது ஒரு மூலையில் எவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோஜனம்? மனம் நிம்மதி இல்லையே என புலம்பிக் கொண்டு இருக்கும்.
இங்கே வாழ்க்கையில் நிம்மதி கிடைக்க பணம் தான் முக்கிய தேவை என்ற எண்ணம் சுத்த பொய்யாகி விடுகிறது. அப்போ எது தான் நிம்மதியும் சந்தோஷமும் தரும்?
உங்க மனசுக்குள்ள ஒரு ஆசையிருக்கும். அது உங்களோட நார்மலான வாழ்க்கையில் இருந்து மாறுபட்டு இருக்கலாம். அதையெல்லாம் செஞ்சா மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு அதை மனசுலேயே மறைச்சி வைச்சி வாழ்ந்துக்கிட்டிருப்பீங்க. உதாரணத்துக்கு எனக்கு ஊர் ஊரா சுத்தணும்னு ரொம்ப ஆசையிருக்கு. ஒரு டீ கடை ஆரம்பிச்சி படி படியா டெவலப் ஆகணும்னு ஆசையிருக்கு.
ஒரு ஐ.டி வேலை பாக்குறவனுக்கு விவசாயம் பண்ணணும்னு ஆசையிருக்கலாம். இப்படி நமக்கு பிடிச்சதை செஞ்சி அந்த லைஃபை வாழும் போது தான் நமக்கு மனநிறைவும் மனநிம்மதியும் கிடைக்கும். நீங்க தூங்கும் போது எந்த யோசனையும் கவலையும் நினைவில் வராமல் தூக்கம் வந்தால் நீங்க மனநிறைவான நிம்மதியான வாழ்க்கை வாழறீங்கன்னு அர்த்தம்.