தீபங்களில் பலவகை உண்டு. அவற்றில் இந்தத் தீபத்தைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டே இருக்க மாட்டோம். இது சமீபத்தில் வந்த ஒன்று தான். இதைப் பயன்படுத்தலாமா…வேண்டாமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
மகாலெட்சுமி வாசம் செய்யும் பொருள்களில் ஒன்று தான் இந்த உப்பு. உப்பு கடலில் இருந்து தான் பிறக்கிறது. மகாலெட்சுமியும் கடலில் இருந்து தான் பிறக்கிறாள். உப்பும், சர்க்கரையும் தான் முதலில் கடையில் வாங்க வேண்டும்.
வீட்டில் எப்போதும் குறையாமல் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் பொருள்களில் முதன்மையானது உப்பும், அரிசியும் தான். உப்பை நாம் பரிகாரமாகப் பயன்படுத்தலாம்.
உடலில் உண்டாகும் தோல்நோய்க்குப் பரிகாரமாக உப்பையும் மிளகையும் சேர்த்து கொடிமரத்தில் இருக்கக்கூடிய பலிபீடத்தில் போடுவர். அல்லது தேர்ச்சக்கரத்தில் போடுவர்.
அப்போது தேர் நல்லா உருண்டு ஓடணும்னா உப்பைக் கொட்டிக் கொண்டே வருவார்கள். அதிலிருந்து உப்பைக் கொட்டியதும் தேரை அதில் உருளச்செய்து இழுப்பார்கள். நெய்யால், வேப்பெண்ணையால் தீபம் ஏற்றினால் அதற்கென பலன்கள் உண்டு.
உப்பு தீபம் என்பது சமீபகாலமாகவே வெளிவந்துள்ள சேதி. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பார்கள். நெய் தீபம் ஏற்றினாலே அங்கு மகாலெட்சுமி வாசம் செய்வாள். எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை சில காலம் பரிட்சயித்துப் பார்த்தே அதைத் தெரிந்து கொள்ள முடியும்.
உப்பு தீபத்தைப் போடலாமா என்பது இப்போது தான் பரீட்சயத்தில் உள்ளது. அதைப் பற்றி இப்போது தெளிவாக சொல்லமுடியாது. எமதீபம், அக்ஷயதிருதியை எல்லாம் சமீபமாக வந்த நிகழ்வுகள் தான்.
இதை எல்லாம் செய்து பார்த்து யார் யாருக்கு நன்மைகள் வந்ததுன்னு சொல்றாங்களோ அதைப் பொறுத்து தான் இதன் நிறை குறைகள் நமக்குத் தெரியவரும். உப்பு தீபம் ஏற்றினால் பாவம் வருமா…என்று சிலருக்கு சந்தேகம் வரலாம்.
அதற்குப் பயப்பட வேண்டிய தேவையில்லை. தெரியாமல் செய்வதால் வருவது பாவமில்லை. எதையும் பக்தியோடு செய்தால் அதில் பாவம் என்பதே வராது. நாம் ஏதாவது தவறை தெரியாமல் செய்துவிட்டால் கடவுள் நம்மைத் தண்டித்து விட மாட்டார்.
அவர் நமக்குத் தாய் மாதிரி. நம்மைக் கண்டிப்பாக மன்னித்தருள்வார். இப்போது உப்பு தீபம் ஏற்றுபவர்கள் நாங்க ஏற்றுகிறோம். நல்லா இருக்கோம்னா தொடர்ந்து ஏற்றுங்க. இல்லேன்னா அதை விடுத்து பழைய நடைமுறைகளையே பின்பற்றுங்கள்.
மகாலெட்சுமிக்கு பிடித்த உண்மையான பக்தி, அன்பு, நேர்மை, எல்லா ஜீவராசிகளையும் தன்னுயிராக நினைப்பவர்களுக்குத் தான் மகாலெட்சுமி என்றும் வாசம் செய்வாள்.
உப்பு தீபத்தை வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி நாள்களில் தான் ஏற்றுவார்கள். மற்ற தினங்களில் ஏற்றக்கூடாது. இதை ஏற்றி வழிபட்டால் நோய் நொடிகள் நீங்கும் என்பது ஐதீகம்.