தீபாவளிக்கு மறுநாள் 13.11.2023 அன்று கந்த சஷ்டி துவங்குகிறது. அன்று மாலை 3.30 மணி வரை அமாவாசை இருக்கு. அதுக்குப் பிறகு பிரதமை என்கிற திதி துவங்குகிறது. அன்று காலை முதலே விரதத்தைத் துவங்கலாம்.
குழந்தைக்காகக் காத்திருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமான நாள். சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று சொல்வார்கள். அதாவது சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு கருப்பையில் கரு உண்டாகும்.
நம் வினைகளின் பயனால் தான் துன்பங்களை அனுபவிக்கிறோம். வினைகள் குறைய குறைய துன்பம் குறைந்து இன்பமாகிறது. அது போல தான் இந்த விரதம் இருக்க இருக்க நமது வினைகள் அகன்று இன்பமயமாகிறது.
நாம் ரெண்டு வருஷம், 4 வருஷம் விரதம் இருந்தோம். குழந்தை இல்லை. விட்டுட்டோம்னு அவநம்பிக்கை வரக்கூடாது. குழந்தையைக் கொடுக்குற வரை விட மாட்டேன்னு உறுதியான நம்பிக்கையோடு முருகப்பெருமானை வழிபடுங்க. நிச்சயமாகக் கிடைக்கும்.
வெளியில் சொல்ல முடியாத அளவு கழுத்தை நெரிக்கும் துன்பம் இருந்தாலும் விரதம் இருங்க. கண்டிப்பாக முருகப்பெருமான் கைகொடுப்பார். மிகுந்த கடன், மிகுந்த துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வாழ்க்கையில் என்ன தேவையோ அதைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். பரம்பரை பரம்பரையாக விரதம் எடுக்கலாம்.
அவரவர்க்கு எது ஏற்றதோ அதன்படி விரதம் இருக்கலாம். விரதம் எடுத்த பின்னர் கஷ்டப்படக்கூடாது. முருகப்பெருமான் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை.
உங்களால் என்ன முறை முடியுமோ அந்த விரதத்தை மட்டும் எடுங்க. இது 7 நாள் விரதம். இது தான் முழுமையான விரதம். சூரசம்ஹாரத்துக்கு மறுநாள் தான் வள்ளி திருமணம் அன்று விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் பட்டினியாகவே இருக்கக்கூடாது.
தண்ணீர் கட்டாயமாகக் குடிக்க வேண்டும். தண்ணீருக்கும் விரதத்துக்கும் சம்பந்தமே கிடையாது. தண்ணீர் கூட குடிக்காம இருக்குறேன்னு சொல்வாங்க. அது ரொம்ப ரொம்ப தப்பு. தண்ணீருக்குத் தோஷம் கிடையாது.
அதனால தண்ணீர் ஒரு நாளைக்கு 2லருந்து 3 லிட்டர் வரை குடிக்கணும். தண்ணீர் உள்ளே போயிக்கிட்டே இருந்தா தான் உடல் உள்ளுறுப்புகள் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கும்.
விரதம் இருக்கும்போது நிறைய தண்ணீர் குடிச்சிக்கிட்டே இருந்தா முகம் தேஜஸா மாறும். விரதம் இருக்கும்போது கட்டிலில் படுக்கக்கூடாதான்னா அது அவரவர் வசதியைப் பொறுத்தது. ஆனா புதுப் பாயோ, புது பெட்ஷீட்டோ விரிச்சிப் படுக்கலாம். இரவில் தூங்கிக் கொள்ளலாம். காலை, மாலை சாமி கும்பிட வேண்டும்.
விரத நேரங்களில் கல்யாண வீட்டுக்குச் செல்லலாம். துக்க வீட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தால் போய்க்கொள்ளலாம். இல்லேன்னா விரதம் முடிந்ததும் போய்க்கொள்ளுங்கள். நாமே உணவில்லாமல் விரதம் இருக்கும்போது தேவை என்றால் மட்டும் பேசுங்கள். வெட்டிப்பேச்சு வேண்டாம். எழுதலாம். பக்திப்பாடல்களைப் பாடலாம்.