முருகனுக்கு முதல் காவடி எடுத்த பக்தர்…. அவரையே வீழ்த்தி அருள்பாலித்த எம்பெருமான்…!

By Sankar Velu

Published:

முருகப்பெருமானுக்கு முதன் முதலாக காவடி எடுத்தவர் யார் என்றால் அது இடும்பன் தான். அவர் தான் பழனிமலை தோன்றுவதற்கே காரணமாக இருந்தாராம். அதனால் தான் இடும்பனை முருகன் இருக்கும் கோவில்களில் காண முடியும். அந்த வகையில் பழனியில் இடும்பனுக்கு என்று தனியாகவே கோவில் ஒன்று உள்ளது. வாங்க பார்க்கலாம்.

பழனிமலை தோன்றுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் இடும்பன். பழனியில் இடும்பனுக்கு என்று ஒரு தனி கோவில் உள்ளது. ஆனால் பழனிக்கு செல்லும் பக்தர்களில் விவரம் தெரிந்தவர்கள் தான் இடும்பனைத் தரிசிக்கின்றனர். இவர்கள் பழனி முருகனின் முழுமையான அருளைப் பெற வேண்டும் என்றால் முதலில் இடும்பனை தரிசித்துவிட்டு தான் பழனி மலைக்குச் சென்று முருகனை தரிசிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

முருகனான என்னை வணங்குவதற்கு முன்பு, இடும்பனான உன்னை வணங்கியே, என் மலையேற வேண்டும். இடும்பனை வணங்குவோருக்கு முருகனை வணங்கிய பலன் கிடைக்கும் என்றும் முருகனே கூறினாராம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இடும்பனை தரிசிக்காமல் இனி பழனி மலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம்.

அசுரர்களுக்கு வித்தைகளை கற்றுக் கொடுப்பதுதான் இடும்பாசுரனின் வேலை. சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் இந்த அசுரர்களுக்கு எல்லாம் வில்லினை எய்த கற்றுக்கொடுத்த ஆசிரியராக இருந்தவர் இடும்பன். முருகப் பெருமான் இந்த அசுரர்களை எல்லாம் வதம் செய்த பின்பு, இடும்பன் சிவனை நினைத்து பூஜை செய்ய ஆரம்பித்தான்.

ஒருமுறை அகத்தியருக்கு சிவ மலையும், சக்தி மலையும் தேவைப்பட்ட காரணத்தினால் முருகப்பெருமானிடம் வேண்டி இந்த இரு மலைகளையும் பெற்றுக்கொண்டார். இந்த இரண்டு மலைகளையும் பூசவனம் என்னுமிடத்தில் வைத்து தினமும் வணங்கி வந்தார் அகத்தியர். எதிர்பாராத விதமாக அகத்தியர் அந்த இரண்டு மலைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பொதிகை மலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

இடும்பன் ஒருசமயம் மலைப் பகுதிகளுக்கு வேட்டைக்காக சென்றபோது குற்றால மலையில் தங்கியிருந்த அகத்தியரை சந்தித்தார். இடும்பனுக்கு முருகப்பெருமானை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததை அகத்தியரிடம் கூறினார். ஒரு அசுரனாக இருக்கும் இடும்பனுக்கு முருகனை தரிசனம் செய்ய எண்ணம் இருப்பதை புரிந்து கொண்ட அகத்தியர், பூசவனத்தில் தான் விட்டு வந்த சிவன் மலையையும், சக்தி மலையையும் பொதிகைக்கு கொண்டு வந்து சேர்த்தால் முருக தரிசனம் கிடைக்கும் என்று கூறினார்.

முருகனை தரிசித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இடும்பனும் அவனது மனைவி இடும்பியும் பூசவனத்திற்குச் சென்று அந்த இரண்டு மலைகளையும் தூக்கிச் செல்வதற்கு வலிமையை வேண்டி, சிவனை நினைத்து தவம் இருந்தனர். அந்த சமயத்தில், அந்த இடத்தில் நீண்ட கம்பு ஒன்று தோன்றியது. சிவனின் சக்தியால் நாலு பக்கங்களிலும் இருந்து நாகப்பாம்புகளும் அந்த இடத்திற்கு வந்தது.

அந்தப் பாம்புகள் நீண்ட கம்பில் தராசு போல இரண்டு பக்கமும் கட்டி மலைகளை அதில் வைத்து காவடி போல சுமந்தபடி பொதிகைக்கு புறப்பட்டனர் இடும்பனும் அவனது மனைவியும். அந்த வகையில் பார்த்தால் முருகனுக்கு முதற் காவடி எடுத்த பெருமை இடும்பனையேச் சாரும்.

சுமையை தாங்க முடியாமல் திருஆவினன்குடி என்ற இடத்தில் சிறிது நேரம் மலைகளை கீழே இறக்கி வைத்தனர். இளைப்பாறிய பிறகு பின்பும் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர். ஆனால் மலைகளை சுமக்க மிகவும் கடினமாக இருந்தது. சிவனின் மலையின் மீது ஒரு சிறுவன் ஏறிக்கொண்டு விளையாடியதை இடும்பன் கண்டான். அந்த குழந்தையின் ரூபமானது தெய்வீக லட்சணங்கள் நிரம்பியிருந்தது.

இதிலிருந்து அந்த குழந்தை ஒரு தெய்வப்பிறவி என்பதை இடும்பன் அறிந்து கொண்டான். தயவுசெய்து மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டான். அந்த சிறுவன் இறங்குவதற்கு மறுத்துவிட்டு, ‘இது எனக்கான மலை, இந்த மலையில் தான் நான் தங்கப் போகிறேன்’ என்ற வாதத்தை முன் வைத்தான்.

இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அந்த சிறுவன் தன் கையிலிருந்த ஆயுதத்தால் இடும்பனை லேசாக தட்ட, இடும்பன் கீழே விழுந்து தன் உயிரை இழந்து விட்டான். இதனைக் கண்ட இடும்பனின் மனைவி அழத்தொடங்கினாள்.

Idumban, Lord Muruga
Idumban, Lord Muruga

அசுரர்களுக்கெல்லாம் வில்வித்தை கற்றுக் கொடுத்த தனது கணவனையே வீழ்த்தும் சக்தியானது அந்த அரக்க அசுரர்களை எல்லாம் வென்ற முருகப்பெருமானை தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது என்பதை உணர்ந்து விட்டால் மனைவி. அந்தச் சிறுவன் முருகன்தான் என்பதையும் அறிந்துகொண்ட இடும்பி முருகனின் காலில் விழுந்து வணங்கினாள். முருகனும், மயிலின் மேல் அமர்ந்து காட்சி தந்து இடும்பனுக்கு முக்தி அளித்து அருள் பாலித்தார்

அன்றுமுதல் இடும்பன் பழனி மலையின் இடையில் நிற்க வேண்டும் என்றும், நீ இந்த சிவமலையை எப்படி தோளில் சுமந்து வந்தாயோ அதேபோல் எனக்குரிய வழிபாட்டுப் பொருட்களையும் பக்தர்கள் காவடியாக கொண்டு வருவார்கள் என்றும், உன்னை முதலில் வழிபட்ட பிறகு என்னை வழிபட வேண்டும் என்றும், உன்னை வணங்கியவர் என்னை வணங்கிய பயன் பெறுவார் என்றும், இடும்பனை தரிசித்தால் இன்னல்கள் தீரும் என்றும், முருகன் இடும்பனுக்கு அருள் பாலித்தார்.

செல்வ வளம் பெருகவும், எந்த வகையான தோஷங்கள் இருந்தாலும் அதிலிருந்து விடுபடவும் பழனிக்குச் செல்பவர்கள் முதலில் இடும்பனை தரிசிக்க வேண்டும்.

பழனி பஸ் ஸ்டாண்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இடும்பன் மலை அமைந்துள்ளது.