அமாவாசை நாளை செவ்வாய்க்கிழமை (21.03.2023) வருகிறது. அமாவாசை கனத்த நாள். அன்று உடல் நலனில் அக்கறை தேவை. நிறைய விஷயங்கள் செய்யக்கூடாதுன்னு சொல்வாங்க. அது ஏன்? பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி.
அவங்க மட்டுமா சொன்னாங்க. இந்து சாஸ்திரமே சொல்லுது. அமாவாசை தினத்தில் எந்தெந்த காரியங்களைச் செய்யக்கூடாதுன்னு…. பார்க்கலாமா…
சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் வரும் நாளைத் தான் அமாவாசை என்கிறோம். சந்திரன் மனோகாரகன். அமாவாசை அன்று சந்திர பகவானின் தரிசனம் கிடைக்காது. அன்றைய தினம் நல்ல காரியம் செய்யலாமா வேண்டாமா என நம்மிடையே பல குழப்பங்கள் நிலவுவதுண்டு. நல்ல காரியங்களுக்கான முடிவை எடுக்கலாம். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அந்தக் காரியங்களைச் செய்யக்கூடாது என்பதே முக்கியம்.
அமாவாசை நம் குலதெய்வத்திற்கு உகந்த நாள். திருஷ்டி கழிப்பதற்கும் ஏற்ற நாள். நம் முன்னோர்களையும் இந்த நாளில் வழிபடலாம். இந்த 3 முக்கியமான விஷயங்களையும் அனைவரும் தவறாமல் செய்து வருவது மிகவும் நல்லது.
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. அன்றைய தினம் வாசலைக் கூட்டி விட்டு தண்ணீர் தெளித்தாலே போதும். பெண்கள் அமாவாசை விரதத்தை மேற்கொள்ளக்கூடாது.
திருமணமான பெண்ணுக்குப் பெற்றோர் இல்லை என்றாலும், அவருக்குக் கணவர் இருப்பதால் பெண்கள் விரதத்தை மேற்கொள்ளக்கூடாது. வீட்டில் உள்ள ஆண்வாரிசுள் இந்த விரதத்தை மேற்கொள்வது அவசியம்.
கணவர் இல்லாத பெண்கள் கணவரை நினைத்து அமாவாசை விரதத்தை மேற்கொள்ளலாம். அமாவாசை அன்று கடன் வாங்கவே கூடாது. கடன் வாங்கிய பணத்திலும் செலவு செய்யவே கூடாது. அமாவாசை அன்று சிறப்பாக உணவு சமைக்கும்போது வீட்டில் இது இல்லை… அது இல்லைன்னு பக்கத்து வீட்ல போய் கடன் வாங்கக் கூடாது.
யாரும் தங்கள் வீட்டில் உள்ள சமையல் பொருள்களைக் கடனாகவும் கொடுக்கக் கூடாது. காகத்திற்கு முதலில் சாதம் வைத்து விட்டு நாம் சாப்பிட வேண்டும். வீட்டில் பூஜை செய்பவர்கள் ஆனாலும், பூஜை செய்யாதவர்களானாலும் இந்தப் பழக்கத்தைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
கண்டிப்பாக முடி திருத்தம் செய்யவே கூடாது. சேவிங் செய்யவும் கூடாது. நகம் வெட்டவும் கூடாது. அமாவாசை அன்று அசைவம் சாப்பிடக்கூடாது. வீட்டில் செய்ய மாட்டார்கள். அதனால் ஆண்கள் வெளியில் போய் ஓட்டலில் அசைவம் சாப்பிடுவார்கள். முடிந்தவரை அதைத் தவிர்க்கப் பாருங்கள். அன்றைய தினம் வீட்டில் வழிபாடு செய்வதற்கு முன்பும், பின்பும் தீட்டு வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அன்று முன்னோர்களுக்குக் கொடுக்க வேண்டிய , தர்ப்பணத்தைத் தவறாமல் கொடுத்து விட வேண்டும். முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது கோடானு கோடி புண்ணித்தை உங்கள் குடும்பத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கும்.
அன்றைய தினம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் கடமையை மறந்தால் அவர்கள் உங்களை மறந்து விடுவார்கள். அன்று நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உண்டு. அது அன்னதானம். வஸ்திர தானமும் செய்யலாம்.
நம்மால் முடிந்த அளவு வயதானவர்களுக்கு அன்னதானமும், வஸ்திர தானமும் செய்யலாம். ஆடி, புரட்டாசி, தை அமாவாசைகளின் போதாவது நாம் முன்னோர்களுக்குக் கண்டிப்பாகத் திதி கொடுத்து அன்னதானம் செய்தால் பித்ரு சாபம், பித்ரு தோஷம், பித்ரு கோபம் என எல்லாவற்றிலிருந்தும் நமக்கு ஒரு விமோசனம் கிடைக்கும்.