ஆன்மிக பக்தர்கள் மிகவும் எதிர்பார்த்த மகாசிவராத்திரி வரும் பிப்ரவரி 26ம் தேதி (புதன்கிழமை) வருகிறது. இந்த நன்னாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவனை உற்சாகமாக வழிபடுவர். தங்கள் வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு நான்கு கால பூஜையிலும் கண்விழித்து இருந்து வழிபடுவார்கள்.
அதே நேரம் கண்விழிக்க வேண்டுமே என்று தேவையில்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது. முழுக்க முழுக்க சிவசிந்தனையுடனே இருக்க வேண்டும். இந்த நன்னாளில் என்னென்ன செய்யக்கூடாது, எதை எல்லாம் படிக்க வேண்டும்? தூக்கம் வராமல் இருக்க எளிய வழி என்னன்னு பார்க்கலாமா…
செய்யக் கூடாத முக்கிய விஷயம்
சிவ ராத்திரிக்கு மறுநாள் பொழுதிலும் நாம் உறங்கக் கூடாது. நாம் உணவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உறங்குவது தவறு. அன்று மாலை நாம் பூஜை அறையில் தீபமேற்றி வழிபட்டு, இரவு 8 மணிக்கு உறங்கலாம்.
சிவ ராத்திரி தினத்தில் கோயிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே கண் விழித்திருக்கத் திரைப்படம் பார்த்தல், விளையாடுவதாக இருந்தால், நாம் சிவராத்திரி விரதம் இருப்பதற்கு பதிலாக சும்மாவே இருந்துவிடலாம்.
சிவராத்திரியில் படிக்க வேண்டியவை
நாம் இரவில் வீட்டிலேயே இருக்க விரும்பினால், சிவலிங்கத்திற்கு நான்கு ஜாம பூஜை அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்து வழிபாடு செய்து, தேவாரம், திருவாசகம், சிவ புராணம், பெரிய புராணம், உள்ளிட்ட சிவன் பாடல்கள் படிக்கலாம். எதுவுமே தெரியாது என்றால் நாம் ஓம் நமச்சிவாய, சிவாய நமஹ என்ற சிவ மந்திரத்தையாவது நாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம். படித்தாலும் தூக்கம் வருகிறது என்றால், சிவாய நமஹ,ஓம் நமச்சிவாய என எழுதுங்கள்.