ஆயிரம் வசதிகள் இருந்தாலும், கோடி கோடியாய் பணம் இருந்தாலும் திருமணமான பலர் குழந்தை செல்வம் இல்லாமல் படும் கஷ்டம் நாம் அனைவரும் அறிந்ததே. பலருக்கு குழந்தை செல்வம் என்பதே இப்போதைய காலக்கட்டத்தில் கிடைப்பது அரிதாகி வருகிறது. உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கர்மா ரீதியான ஜாதக ரீதியான பிரச்சினைகளாலும் பலருக்கு குழந்தை வரம் கிடைப்பதில்லை.
அப்படிப்பட்ட பெண்கள் தங்கள் கணவர்களுடன் வந்து இக்கோவிலில் வழிபட்டு செல்லலாம்.. கும்பகோணம் அருகில் உள்ள திருக்கருகாவூர் கோவில்தான் நாம் சொல்ல வரும் கோவில்.
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது.
இத்தலத்தில் அருள்பாலிப்பவர் முல்லைவன நாதர் இவரை வணங்கி இங்குள்ள கர்ப்பரட்சாம்பிகையை வணங்கினால் பிள்ளை செல்வம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. சிலருக்கு எத்தனை மருத்துவமனைகளில் பார்த்தாலும் குழந்தை வரம் கிடைப்பது கடினமாக இருக்கும். மருத்துவர்கள் கைவிட்டாலும் இங்கு வந்து இங்குள்ள கர்ப்பரட்சாம்பிகையை வணங்கி அங்கு தரும் நெய் பிரசாதத்தை சாப்பிட்டால் திருமணமான பெண்கள் சீக்கிரம் கர்ப்பம் தரிப்பர் என்பது ஐதீகம்.
பலரும் இங்கு வந்து அம்பிகையின் அருள் பெற்று குழந்தை வரம் வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.