அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கணும். இதுதான் பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால் தானம் வழங்கணும்கற எண்ணம் 100த்துல 10 பேருக்குக் கூட இருக்காது. ஏன்னா நாம அப்படியே வளர்ந்துட்டோம். இனியாவது தானம் வழங்குங்க. வெறும் அன்னதானம் மட்டும் தானம் கிடையாது. அதுவும் வழங்க வேண்டும். வேறு தானமும் வழங்கலாம். என்னென்ன தானம் எல்லாம் வழங்குவது என்று பார்க்கலாம்.
அட்சய திருதியை நாளில், பொன்னும் பொருளும் வாங்கவேண்டும் என்கிறார்களே என்பதுதான் பலரின் கேள்வி. உண்மையில்… அந்தநாளில், அட்சய திருதியை நாளில், உப்பு வாங்குங்கள். உங்கள் வீட்டில் செல்வம் கடாக்ஷத்துடன் திகழும் என்பதை அடுத்தடுத்த காலகட்டத்தில் நீங்களே உணருவீர்கள்.
அதேபோல்… நாம் இந்தநாளில் செய்யவேண்டியது… தானம். அட்சய திருதியை நாளில்., தானம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது சாஸ்திரம். முடிந்தவர்கள், தங்கமோ வெள்ளியோ ஆச்சார்யர்களுக்கு தானமாக வழங்கி நமஸ்கரிக்கலாம். இன்னும் சொல்லப்போனால், ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு, நம்மால் முடிந்த தாலியோ தாலியில் கட்டிக்கொள்ளும் காசோ வழங்கலாம்.
தங்கத்துக்கும் வெள்ளிக்கும் எங்கே போறது’ என்று அலுத்துக்கொள்கிற மிடில்கிளாஸ் அன்பர்கள், எவருக்கேனும் குறிப்பாக வயதானவர்களுக்கு குடை வாங்கிக் கொடுங்கள். இன்னொருவருக்கு செருப்பு வழங்குங்கள். வீட்டு வாசலில் ஒரு பானை வைத்து ஜில்லென குடிநீர் வழங்குங்கள். ‘அடிக்கிற வெயிலுக்கு ஒரு மோர் கொடுத்தா நல்லாருக்குமே’ என்று நினைத்தால், நீர்மோர் வழங்குங்கள், இனிப்பும் குளுமையும் தருகிற பானகம்வழங்குங்கள்.
மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்,பேனா, பென்சில், ஸ்கெட்ச் பேனா, டிராயிங் நோட்டு வழங்குங்கள். பெண்களுக்கு மஞ்சளும் குங்குமமும் மல்லிகைப்பூவும் வழங்குங்கள். முடிந்தால், ஜாக்கெட் பிட் வழங்கலாம்.
சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு, பாய், போர்வை வழங்குங்கள். ஆடை வழங்குங்கள். ஒரு பத்துபேருக்காவது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். இவையெல்லாம் செய்யச் செய்ய, இந்த தானங்களை வழங்க வழங்க… உங்கள் வீட்டில் செல்வமும் வளமும், காசும், பணமும், தங்கமும் வெள்ளியும் பன்மடங்கு புண்ணியங்களாகச் சேரும் என்பது ஐதீகம்;
மேற்கண்டவற்றில் உங்களால் முடிந்ததைத் தானமாகச் செய்யுங்கள். அந்த தானத்தின் தருமம்… உங்களின் ஏழேழு தலைமுறையையும் காக்கும் என்பது சத்தியம்!