பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?

By Sankar Velu

Published:

தீபம் வீட்டிலும், ஆலயத்திலும் ஏற்றக்கூடிய ஒன்று. ஒரு இடத்தில் இருக்கும் இருளை நீக்கி அங்கு வெளிச்சம் வரவே தீபம் ஏற்றுகிறோம். இறைவனின் சன்னதியில் தீபம் ஏற்றுகிறோம். பெரியோர்கள் ஆன்ம ஒளியாகவே தீபத்தை சொல்வர்.

என்னுடைய ஆணவம், கன்மம், மாயை என மும்மலங்களையும் நீக்கினால் தான் ஞானம் கிடைக்கும். அதற்காக நமது அறியாமையை ஒழித்து ஞானத்தை வளர்க்கவே தீபத்தை ஏற்றுகிறோம்.

ஆரம்பத்தில் மண் விளக்கு (அகல் விளக்கு) இதில் பஞ்சு திரி போட்டு, எண்ணெய் ஊற்றி தீபமாக ஏற்றுகிறோம். இங்கு பஞ்சபூதங்களும் சேர்கிறது. ஒரு மண் விளக்கில் மண் ஒரு பூதம்.

மண்ணை விளக்காகச் செய்ய தண்ணீர் தேவை. காற்று இல்லாவிட்டால் விளக்கு எரியாது. நெருப்பு தான் சுடர். ஆகாயம் என்ற தத்துவத்தில் இறைவன் எப்படி இருக்கிறார் என்பதை சுடராக நமக்கு அறிவுறுத்துவதுதான் இந்த விளக்கு.

அதனால் தான் பெரியவர்கள் அகல் விளக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. பஞ்சபூதங்களும் இணைந்து இருக்கிற ஒரு பொருளில் நாம் இறைவனை வழிபட வேண்டும்.

கல்லில் வடிவமைத்த விளக்கு கோவில்களில் பார்க்கலாம். கஜலட்சுமி விளக்கு, காமாட்சி விளக்கு எல்லாம் அதன்பிறகு வந்தவை.

AV
AV

வெற்றிலையில் தீபம் ஏற்றலாமா என சந்தேகம் வரும். பெயரிலேயே வெற்றி இருக்கிறது. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையாகப் போடுவர். சமீபத்தில் வெற்றிலையில் மஞ்சள், குங்குமம் வைத்து தீபம் ஏற்றினால் செல்வம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஜாதகத்தில் பிரச்சனை இருக்கும்.

அவரவர்க்கு ஏற்ப பரிகாரம் செய்வர். அதனால் அவரைப் பார்த்து நமக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே நாமும் செய்யக்கூடாது. இப்படித்தான் இன்று ஒவ்வொரு கோவிலுக்கும் செல்பவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் தானும் செய்தால் நல்லா இருக்குமே என்று செய்து விடுகிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியாமல் செய்கிறார்கள். அதனால் அவர்களது பிரச்சனையும் தீர்ந்தபாடில்லை. கல்யாணம், கடன் பிரச்சனை தீர, நோய் நீங்க என எல்லாவற்றிற்கும் பரிகாரம் உண்டு. அவரவர் பிரச்சனைக்கு ஏற்ப இதைச் செய்து வரலாம். அகல்விளக்கு என்பது பொதுவானது. பரிகாரம் யாருக்காவது செய்யத் தேவைப்பட்டால் வெற்றிலை தீபம் ஏற்றலாம். அதனால் எல்லாரும் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.