தவத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்தவும், சைவ வைணவர்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்கவும் இறைவன் நடத்திய திருவிளையாடல் தான் ஆடித்தபசு. இன்று நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் கோவிலில் ஆடித்தபசு விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இந்த நாளை ‘மிஸ்’ பண்ணாம இறைவனின் அற்புதக்காட்சியைக் கண்டு தரிசித்து வாருங்கள்.
கோமதி அம்மன் ஊசி முனையில் ஒற்றை காலில் தவம் இருக்கிறாள் என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. அம்மன் தவம் இருப்பதே அண்ணன் நாராயணரும், கணவர் சங்கரரும் ஒருவரே என்பதே உலகிற்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கர நாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் தபசு விழா கொண்டாடப்படுகிறது.
சங்கன் பதுமன் என்ற நாக வம்சத்து அரசர்களுக்கு இடையே ஒரு போட்டி. சங்கன் சிவனை வணங்குபவர். பதுமன் நாராயணரை வணங்குபவர். சிவன் தான் பெரியவர் என்று சங்கன் சொல்ல, நாராயணர் தான் பெரியவர் என்று பதுமன் சொல்ல இருவருக்குமே கடும் சண்டை வந்தது.
‘நாம் ஏன் சண்டை போட வேண்டும்? அந்த பார்வதியிடமே கேட்டு விடுவோம்’ என்று இருவரும் அன்னையிடம் வருகிறார்கள். நேராக கணவனிடம் போய் சொன்னாள் அன்னை. ‘ஹரியாகிய அண்ணனும், ஹரனாகிய நீங்களும் ஒருவர் தான் என்று மக்களுக்கு உணர்த்துங்கள்’ என்று. அதற்கு சிவனோ ‘அவ்வளவு சீக்கிரம் நான் காட்சி அளித்து விடுவேனா நீ தவம் இருக்க வேண்டும்’ என்றார்.
‘தவம் இருந்தால்தான் வரம் கிடைக்கும். புன்னை வனங்கள் நிரம்பிய வனத்தில் முனிவர்கள் என்னை நோக்கி தவம் இருக்கிறார்கள். அங்கு சென்று நீ தவம் இரு. ஆடி மாத பௌர்ணமி நாளில் நான் வந்து காட்சி தருகிறேன்’ என்றார்.
தோழிகள் பசுக்கூட்டங்களாக அன்னையுடன் தவம் இருக்க, அன்னை ஆவுடை நாயகியாக ஒற்றைக்காலில் ஊசி முனையில் இறைவனை நோக்கி தவம் இருந்தாள். இன்றைய சங்கரன் கோவிலில் அன்னை இருந்த தவம் நீடித்தது. பசுக்களுடன் அன்னை தவம் இருந்ததால் ‘கோமதி’ என்று அழைக்கப்பட்டார்.
‘கோ’ என்றால் ‘பசுக்கள்’. ‘மதி’ என்றால் நிலவு போன்ற முகம் கொண்டவர் என்று பொருள். அன்னையின் தீவிர தவத்திற்கு வரம் கிடைக்கும் நாளும் வந்தது. ஆடி மாத பௌர்ணமி, நிலவு ஒளி வீச ஊசி முனையில் தவமிருந்த அன்னையின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், சங்கரநாராயணராக காட்சி அளித்தார்.
உருகி நின்ற பார்வதியிடம் ‘வேண்டிய வரங்களைக் கேள்’ என்று சொன்னார் சிவபெருமான். ‘இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திருஉருவைக் கொண்டு என்னுடன் தங்க வேண்டும்’ என அம்பாள் வேண்ட, ஈசனும் கோமதி சங்கரனாய் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சங்கரன்கோவில் பாம்புகள் சங்கன், பதுமன் வழிபட்ட கோயில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். இது சரும நோய்ககளை நீக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
தவமிருக்கும் அன்னைக்காக பக்தர்கள் ஆடிச்சுற்று சுற்றுகின்றனர். தவக்காலத்தில் கோமதி அம்மனை சுற்றினால் தங்களது வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இன்று (21.07.2024) அம்பிகையையும், சங்கரர் நாராயணரையும் வழிபட கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.