எனக்கு நேரமே சரியில்ல. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோன்னு நம்மில் சிலர் அன்றாட வாழ்க்கையில் புலம்பித் தவிப்பதைப் பார்த்திருப்போம். சிலர் கோவில் கோவிலாகச் சென்று பார்த்து கடவுளிடம் முறையிடுவர். குழந்தைப் பேறு இருக்காது.
திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும். கேட்டால் தோஷம்… பரிகாரம்னு நிறைய சொல்லி புலம்பித் தவிப்பாங்க. வேலைல கஷ்டம். எங்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் இல்லைன்னு சொல்வாங்க. எல்லாத்துக்கும் ஒட்டுமொத்தமா பலன் தர வருகிறது ஆடிக்கிருத்திகை. அதுல அப்படி என்ன விசேஷம்னு கேட்குறீங்களா? படிங்க… புரியும்.
சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம் என முருகப்பெருமானுக்கு விசேஷமான நாள்கள் பல உண்டு. அவற்றில் விரதம் இருந்து வழிபடக்கூடிய திருநாள்கள் எவை என்றால் மாதந்தோறும் வரக்கூடிய சஷ்டி, திருக்கார்த்திகை.
கார்த்திகை என்ற நட்சத்திரத்தில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்தால் நம் துன்பங்கள் எல்லாம் மறைந்து இன்பங்கள் கிடைக்கும். தலைமைப் பதவி கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல உயர்வு உண்டாகும்.
பெற்றது ஒரு தாய். வளர்த்தது ஒரு தாய் என்றால் வளர்த்தவருக்கும் தாய்க்கு இணையான சிறப்பு உண்டு. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு தனிச்சிறப்பு உண்டு. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகப்பெருமான் அவதாரம் செய்கிறார். அவரை வளர்த்த பெருமை கார்த்திகை பெண்களுக்கே உண்டு. இவர்கள் அன்னை பராசக்திக்கு நிகராக இந்தப் பெண்கள் வணங்கப்படுகின்றனர்.
அதனால் பராசக்திக்கு சிறப்புக்கு உரிய ஆடி மாதத்தில் அதுவும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டால் அதிவிசேஷமான பலன்கள் கிடைக்கும். அதனால் தான் மற்ற கிருத்திகையை விட இந்த ஆடிக்கிருத்திகைக்கு அத்தனை விசேஷம்.
இந்த நன்னாளில் கார்த்திகை பெண்களை மதித்து அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். அவர்களையும் நினைத்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். 9.8.2023 அன்று காலை 7.30 மணிக்குக் கிருத்திகை நட்சத்திரம் ஆரம்பித்து விடுகிறது.
முதல் நாள் வரக்கூடிய பரணி நட்சத்திரம் அன்றும் நாம் விரதம் இருந்து வழிபடலாம். அன்று இருக்க முடியவில்லை என்றால் கார்த்திகை நட்சத்திரம் அன்று மட்டும் விரதம் இருக்கலாம். 8ம் தேதி மதியத்துக்கு மேல் உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது.
இரவு பால், பழம் ஏதாவது சாப்பிட்டு 8ம் தேதியே விரதத்தைத் துவங்கி விடுகிறோம். 9ம் தேதி முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும். அன்று மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்யலாம். இது கடினமான விரதம். அதனால் பலரும் கிருத்திகை அன்று மட்டும் விரதம் இருக்கிறார்கள்.
அன்றைய தினம் உப்பில்லாமலும் உணவு எடுக்கலாம். எளிய முறையில் விரதம் இருக்கலாம். மாலையில் வீட்டில் முருகப்பெருமானின் திருவுருவப்படம் வைத்து மலர்களால் அலங்கரித்து பால், பழம் என நைவேத்தியம் வைத்து சற்கோணக் கோலம் போட்டு முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
சற்கோணக் கோலத்தை மனப்பலகை அல்லது தரையை சுத்தம் செய்தும் கோலம் போடலாம்.
அதில் 6 தீபம் சரவணபவ என்ற மந்திரத்தில் ஒவ்வொரு எழுத்துகளிலும் ஒவ்வொன்றை ஏற்றி வழிபடுங்கள். இந்த தீபத்தில் நெய் ஊற்றி வழிபடுவது சிறப்பு. இல்லாதவர்கள் நல்லெண்ணை ஊற்றலாம். தீபம் ஏற்றிய பிறகு ஓம் சரவணபவ என்ற நாமத்தை 108 முறை ஜெபம் பண்ணுங்க. கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் பண்ணுங்க. குழந்தைக்காகக் காத்துக் கொண்டு விரதம் இருப்பவர்கள் திருப்புகழைப் பாடி வழிபடலாம்.
சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணி தீப தூப ஆராதனைகள் காட்டி வழிபட்ட பிறகு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். ஜாதகத்தில் எப்பேர்ப்பட்ட தோஷமாக இருந்தாலும் இந்த ஆடிக்கிருத்திகையில் வழிபடுபவர்களுக்கு அது நீங்கி விடும். முருகன் செவ்வாய்க்கு அதிபதி. அதனால் திருமணத் தடை நீங்கும். பித்ருகளின் சாபம் நீங்கி குழந்தைப் பேறு கிடைக்கும்.
வறுமை நீங்கும். நோய் நீங்கும். தலைமைத்துவப் பண்பு நிச்சயமாகக் கிடைக்கும். பதவி உயர்வு கண்டிப்பாகக் கிடைக்கும். பிரச்சனைகள் இல்லாமல் எதிர்பார்க்காமல் நமக்கு உயர்வு கிட்டும். இவ்ளோ பலன்களா என்று ஆச்சரியப்பட வேண்டாம். முருகப்பெருமானை மனமுருக வேண்டி நினைத்து வழிபாடு செய்யுங்க. உங்களோட எண்ணங்கள் நிச்சயம் நிறைவேறும்.