அச்சு முறுக்கு என்பது இப்போது அதிகமாக உபயோகத்தில் இல்லை என்றாலும் சிறிது ஆண்டுகளுக்கு முன்பு இதை விரும்பி சாப்பிட என்றே தேடி தேடி சென்று சாப்பிடுவார்கள். பண்டிகை நாள்களில் வீட்டிலேயே இதனை ரெடி பண்ணி அசத்துவார்கள். இப்போதும் கிராமங்களில் விரும்பி சாப்பிடும் ஒரு பொருளாக அச்சு முறுக்கு இருந்து வருகிறது. அதை எப்படி நாம் வீட்டுலயே செய்யலாம் என நாம் இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
அரிசி மாவு – 1 கப்
பொடித்த சர்க்கரை – 1/2 கப்
தேங்காய்ப்பால் – 1 கப்
மைதா – 1/4 கப்
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
எண்ணை – தேவையான அளவு
வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் இத்தனை நன்மைகளா? கண்டிப்பா தெரிஞ்சிகோங்க!
செய்முறை:
மைதா, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்து எடுத்து கொள்ள வேண்டும். பின்பு அதை ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும். பின்னர் அதில் தேங்காய்ப்பாலை விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் தண்ணீராகவும் இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பின்னர் கடாயில் எண்ணையை விட்டு எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்த பின்னர் கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும். அப்போதுதான் அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும். உடனே மாவுடன் ஒட்டிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தனியாக வரும். அப்பொழுது மெதுவாக அச்சை உதறினால் முறுக்கு அச்சிலிருந்து தனியாக எண்ணையில் விழுந்து விடும். பின்னர் அது பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விட்ட பின்பு சுவையான மொறு மொறு குழந்தைகளுக்கு பிடித்தமான அச்சு முறுக்கு ஸ்னாக்ஸ் ரெடி.