பெங்களூரு ஸ்டார்ட்அப்பில் பணிபுரிந்த இளம்பெண் ஒருவருக்கு மன உளைச்சல், உடல்நலம் குறித்த அச்சம் எழுந்ததை அடுத்து தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை அடுத்து அந்த நிறுவனத்தில் உள்ள னைத்து ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு ஸ்டார்ட்அப்பில் பணிபுரிந்த இளம்பெண்ணுக்கு பணிச்சூழல் மிகவும் மோசமாக இருந்ததால், அலுவலகத்திற்கு வரும் முன்பே அவருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பெண் தனது ரெடிட் தளத்தில் கூறியதாவது:
நான் பெங்களூருவை சேர்ந்த 25 வயது பெண். பல மாதங்கள் வேலையில் மன ரீதியான துன்புறுத்தலை சந்தித்த பிறகு சமீபத்தில் எனது ராஜினாமா கடிதத்தை அளித்தேன். ஒரு பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ‘தயாரிப்பு அனுபவ மேலாளராக’ பணிபுரிந்து வந்தேன். உண்மையிலேயே, அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பே எனக்கு பீதித் தாக்குதல்கள் வரும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. என்னால் முடிந்தவரை நான் பொறுத்துக் கொண்டேன், ஆனால் எனது மனநலத்தை அனைத்திற்கும் மேலாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நான் அறிந்தேன். உடனே நான் ராஜினாமா செய்தேன்.. நான் ராஜினாமா செய்தவுடன் எனது முழு அணியும் ராஜினாமா செய்தது.
இப்போது, ஒரு புதிய வேலையை கண்டுபிடிக்க எனக்கு சுமார் 4 மாதங்கள் அவகாசம் தேவைப்படும். வாடிக்கையாளர் அனுபவம், செயல்பாடுகள் அல்லது தயாரிப்பு ஆலோசனை பணிகளில் வாய்ப்புகளை தேடுகிறேன், முன்னுரிமையாக வீட்டிலிருந்து வேலை செய்யும் அல்லது பகுதிநேர வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன். இதுபோன்ற அனுபவத்தை நீங்கள் சந்தித்திருந்தால் அல்லது இதுபோன்ற அனுபவத்திற்கு பிறகு வேலை தேடுவதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஏதேனும் ஆலோசனை இருந்தால், தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்,” என்று அந்த 25 வயது பெண் மேலும் கூறினார்.
இந்தப் பதிவுக்கு பதிலளித்த ஒரு பயனர், “மோசமான பணி கலாச்சாரம் இந்திய ஸ்டார்ட்அப்களில் ஒரு சாதாரணமாகிவிட்டது போல தெரிகிறது. நிறுவனர்கள் முதலீட்டாளர்களின் பணத்தை பல மடங்கு லாபம் பெற வேண்டும் என்பதற்காக ஒருவர் மூன்று பேர் வேலையை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்,” என்று எழுதியுள்ளார்.
மற்றொருவர், “இந்திய கார்ப்பரேட் கலாச்சாரத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நீங்கள் எந்த தொழிலைப் பார்த்தாலும், அவர்களுக்கு ஒரு ‘விஷமான’ பணி கலாச்சாரம் உள்ளது. இந்தியாவில் யாராவது நிம்மதீயாக வேலை செய்யக்கூடிய ஒரே ஒரு நிறுவனம் கூட இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பணியில் அழுத்தம், மனச்சோர்வு காரணமாகத்தான் இன்றைய நாளில் இளைஞர்கள் பலருக்கு நெஞ்சுவலி உள்பட பல உடல்நலக்குறைபாடுகள் வருகிறது. வாழ்க்கையில் வாழ வேலை வேண்டும் தான், ஆனால் அந்த வேலையை ரசித்து விருப்பத்துடன் செய்ய வேண்டும். அச்சத்துடன் பணி செய்தால் பெரும் சிக்கல் தான் என்பது இந்த பெண்ணின் அனுபவத்தில் இருந்து வருகிறது.