ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே.. 11A இருக்கைக்காக சண்டையா? விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் பயணி..!

  பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சூரத் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒரு பெண் பயணி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதால், விமான பணியாளர்களால் வலுக்கட்டாயமாக…

passenger

 

பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சூரத் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒரு பெண் பயணி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதால், விமான பணியாளர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இந்தக் காட்சி, சக பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் புறப்பட தயாராக இருந்தபோது, எலஹங்காவை சேர்ந்த வியாஸ் ஹிரல் மோகன்பாய் என்ற பெண் பயணி, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இல்லாமல், தனது உடைமைகளை வேறொரு இருக்கைக்கு அருகில் வைத்துள்ளார். இதை கவனித்த விமான பணியாளர்கள், உடைமைகளை உரிய இடத்தில் வைக்குமாறு கேட்டு கொண்டனர்.

ஆனால், அந்தப் பெண் அதற்கு செவிசாய்க்கவில்லை. மேலும், சக பயணிகளிடமும், விமான ஊழியர்களிடமும் அவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, மற்ற பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த பெண்ணை விமானத்தில் இருந்து வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் விமான பணியாளர்களுக்கு ஏற்பட்டது.

அந்தப் பெண் விமானத்தில் இருந்து வெளியேற்றப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அதில், இரண்டு பெண் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வெளியே அழைத்துச் செல்வதையும், அவர் தனக்குள்ளேயே முணுமுணுப்பதையும் காணலாம். இந்தப் பெண் சக பயணியை தள்ளியதாகவும், விமானப் பணியாளர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையக் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் வேடிக்கையாக ஒருவேளை அந்த பெண் 11A இருக்கை தனக்கு வேண்டும் என சண்டை போட்டிருக்கலாம் என பதிவு செய்துள்ளனர்.

https://x.com/ganeshan_iyer/status/1935605138573463772