நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக – பாஜக கூட்டணியில் சேராது என்று அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுதியாக கூறி வருகின்றனர். ஆனால், இதற்கு பின்னணியில் ஒரு மறைமுக ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விஜய் தனது முதல் கட்சி மாநாட்டில் பாஜக தனது கொள்கை எதிரி என்று பிரகடனம் செய்துள்ளார். அதன் பின்னரும் அவர் பாஜக இருக்கும் கூட்டணியில் சேர்ந்தால், அவரது பிம்பம் பாதிக்கப்படும் என்பது வெளிப்படை. மக்கள், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக விஜய்யை நினைத்து கொண்டிருக்கும் நிலையில், முதல் தேர்தலிலேயே அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்றால், அவர் மீதான பிம்பம் ஒரேயடியாக சரியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் சேர்ந்தால், அதையே ஒரு பெரிய விமர்சனமாக திமுகவும் முன்வைக்கும் என்பது இன்னொரு காரணம். எனவேதான் அவர் அதிமுக – பாஜக கூட்டணியில் சேரவில்லை என்று மேலோட்டமான ஒரு கருத்து உள்ளது.
ஆனால், உண்மை என்னவென்றால், விஜய்க்கும் பாஜகவுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் தனித்து நின்று அல்லது ஒரு கூட்டணியை அமைத்து, முழுக்க முழுக்க திமுகவின் வாக்குகளை சிதைக்க வேண்டும் என்பதுதான் இரு தரப்புக்கும் இடையிலான ரகசிய ஒப்பந்தம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவின் வாக்குகளில் 5 முதல் 10% வரை விஜய் பிரித்துவிட்டால், திமுக கூட்டணி பலவீனமடைந்துவிடும் என்றும், இந்த பலவீனம் காரணமாக அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்று அமித்ஷாவின் மாஸ் திட்டமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதைத்தான் விஜய் செயல்படுத்தி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில், விஜய்க்கு திமுக வெற்றி பெறக் கூடாது என்பதுதான் கொள்கையாக உள்ளது. அதேபோல், அதிமுக – பாஜக கூட்டணியும் திமுக வெற்றி பெறக் கூடாது என்ற கொள்கையில்தான் உள்ளது. எனவே, இந்த இரண்டு கொள்கைகளையும் நிறைவேற்றும் வகையில், இப்படி ஒரு மாபெரும் திட்டத்தை அமித் ஷா போட்டிருப்பதாகவும், விஜய்யிடம் முழுக்க முழுக்க வரவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கு எதிராகவே விமர்சனம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் விஜய் கேட்டவுடன் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில வசதிகளும் செய்து கொடுக்க பாஜக மேலிடம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பரவி வரும் நிலையில், இது எந்த அளவுக்கு உண்மை என்பது போக போகத்தான் தெரியும்..