மே மாதம் என்றாலே கடுமையான வெயில் அடிக்கும் என்பதும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரிக்கும் என்பதும் தெரிந்ததே/ குறிப்பாக மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிசயமாக இந்த ஆண்டு மே மாதத்தில் டெல்லியில் கடும் குளிர் அடிப்பதாகவும் இதனால் பொதுமக்கள் ஸ்வெட்டர் மட்டும் போர்வையை தேடி அலைவதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது.
கோடை காலத்தில் குளிர் காலம் போல பனிப்பொழிவு டெல்லியில் ஏற்பட்டுள்ளதாகவும் சாலைகளில் பனிப்பொழிவு இருப்பது பல புகைப்படங்களில் இருந்து தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு சில பகுதிகளை கனமழையும் பெய்து வருகிறது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் உள்ள பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இதனை அடுத்து அதிகரித்து வரும் கோடை வெப்ப நிலையில் இருந்து பொதுமக்கள் தப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வானிலை ஆய்வு நிலையத்தின் அறிக்கையின்படி டெல்லியில் அதிகபட்சம் 32 டிகிரி செல்சியஸ் தான் வெப்பம் இருந்தது என்றும் குறைந்தபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் இருந்தது என்றும் கூறப்படுகிறது. 17 டிகிரி என்பது கிட்டத்தட்ட ஊட்டி கொடைக்கானலில் இருக்கும் வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினமும் டெல்லியில் கனமழை பெய்ததாவும் டெல்லியில் உள்ள ஹவுஸ் காஸ், கிரீன் பார்க் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
டெல்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 20.9 மிமீ மழையும், அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ், இயல்பை விட ஒன்பது புள்ளிகளும் பதிவாகியுள்ளது.
பாலம், லோதி சாலை, ரிட்ஜ், அயநகர், முங்கேஷ்பூர், நரேலா, பிடம்புரா மற்றும் பூசா ஆகிய இடங்களில் புதன்கிழமை முறையே 11.8 மிமீ, 24.6 மிமீ, 14.6 மிமீ, 13.8 மிமீ, 31.5 மிமீ, 9.5 மிமீ, 55.5 மிமீ மற்றும் 15.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.