பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் நேற்று முன் தினம் வெள்ளை மாளிகையில் ஒரு முக்கியமான சந்திப்பை நடத்தினார். இந்த உயர்மட்ட சந்திப்பு, பாகிஸ்தானில் பெரும் விவாதத்தையும், புருவங்களையும் உயர்த்தியுள்ளது. ஏனெனில், பாகிஸ்தானின் முக்கிய ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் இந்த சந்திப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
வெள்ளை மாளிகையின் அமைச்சரவை அறையில், எந்தவொரு பாகிஸ்தான் சிவில் தலைமைத்துவமும் இல்லாமல், ஒரு மூடிய அறைக்குள் நடைபெற்ற இந்த மதிய உணவு சந்திப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காரணம், இதுதான் முதல் முறையாக, ஒரு அமெரிக்க அதிபர், பாகிஸ்தான் ராணுவ தளபதியை இவ்வளவு பிரத்யேகமான உயர்மட்ட சூழலில் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பில் ஜெனரல் முனீர் மட்டுமன்றி, பாகிஸ்தானின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக்கும் உடனிருந்தார். ஆனால், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் அதாவது தூதர், வெளியுறவு அமைச்சர், ஏன் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூட இந்த சந்திப்பில் இடம்பெறவில்லை என்பதுதான் முக்கிய கேள்வி.
முன்னணி பத்திரிகை ஒன்று “குறிப்பிடத்தக்க வகையில், பாகிஸ்தானிய சிவில் அதிகாரிகள் யாரும் இல்லை. தூதர் இல்லை, வெளியுறவு அமைச்சர் இல்லை, ராணுவத் தளபதியும், பாகிஸ்தானின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக் மட்டுமே இருந்தனர்.”
அமெரிக்கத் தரப்பில், ட்ரம்புடன் வெளியுறவுச் செயலாளர் செனட்டர் மார்கோ ரூபியோ மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இணைந்திருந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான ISPR கூற்றுப்படி, இந்தச் சந்திப்பு அசல் திட்டமிடப்பட்ட ஒரு மணிநேரத்தை விட, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
ISPR வெளியிட்ட அறிக்கையில், இந்த வருகை வெற்றிகரமானது என்று குறிப்பிட்டதுடன், “அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் கடந்த மூன்று நாட்களில், இந்தியா பல ஆண்டுகளில் அடைய முடியாததை அடைந்துள்ளன,” என்று பெருமிதத்துடன் கூறியது. மேலும், இந்த சந்திப்பு வாஷிங்டனில் பாகிஸ்தானுக்கு பல சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி என்றும் வர்ணித்தது.
ராணுவத் தளபதி மட்டும் அழைக்கப்பட்டு, பிரதமர் எங்கும் காணப்படாதது எந்தவொரு நாட்டிற்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்,” என்று இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
முனீர் வெள்ளை மாளிகையில் இருந்ததும், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் இல்லாததும், அண்டை நாட்டில் உள்ள அதிகார போராட்டத்தை குறிக்கிறது என்றும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் பாகிஸ்தானின் உள் கட்டமைப்பை பற்றிய பல கேள்விகளை உலக அரங்கில் எழுப்பியுள்ளது.
இந்த செய்திக்கு ‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி’ என பாகிஸ்தான் பிரதமர் தனிமையில் புலம்பி கொண்டிருப்பார் என நெட்டிசன்கள் கிண்டலாக கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.