இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ், ஹெடிங்லேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டின் முதல் நாளான இன்று 23 வயதான ஜெய்ஸ்வால், ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்து, வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸின் 49வது ஓவரின் கடைசி பந்தில் பிரைடன் கார்ஸ் வீசிய பந்தில் ஒரு ரன் அடித்து ஜெய்ஸ்வால் 100 ரன்கள் என்ற மைல்கல்லை தொட்டார். ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்டில் சதம் அடித்த ஜெய்ஸ்வால், மேற்கு இந்திய தீவுகளிலும் தனது டெஸ்டில் சதம் அடித்தார். அதேபோல் இன்று, இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்டில் சதம் அடித்த சாதனை செய்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கு இந்திய தீவில் நடந்த முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் 171 ரன்கள் அடித்து அந்நாட்டில் முதல் டெஸ்டில் சதமடித்தார். இதே டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவும் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் இந்தியர்கள் அடித்த சதங்கள்:
146 – முரளி விஜய் (ட்ரென்ட் பிரிட்ஜ் 2014)
133 – விஜய் மஞ்ரேகர் (ஹெடிங்லே 1952)
131 – சௌரவ் கங்குலி (லார்ட்ஸ் 1996)
129* – சந்தீப் பாட்டில் (மான்செஸ்டர் 1982)
100* – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ஹெடிங்லே 2025)
ஜெய்ஸ்வால் இதுவரை 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். இந்தியாவின் முதல் இன்னிங்ஸின் 50வது ஓவர் முடிவில், கேப்டன் ஷுப்மன் கில்லுடன் (72 பந்துகளில் 57 ரன்கள்) மூன்றாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்துள்ளார்.