2020ஆம் ஆண்டு வெளியான ’தாராள பிரபு’ என்ற தமிழ் திரைப்படம் விந்தணு தானத்தை பற்றி விழிப்புணர்வை கொண்டு வந்தது. ஆனாலும், இந்த நடைமுறைக்கு சமூகத்தில் ஒரு தயக்கமும், தவறான புரிதலும் உள்ளன. ஆனால், இதற்கு மாறாக, பல மேற்கத்திய நாடுகளில் விந்தணு தானம் ஒரு மதிக்கப்படும் மற்றும் நல்ல சம்பளம் தரும் தொழிலாக உள்ளது.
இந்தியாவில், விந்தணு தானம் இன்னும் ஒரு மறைக்கப்பட்ட விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது பற்றிய சரியான புரிதலும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒரு விந்தணு தானத்திற்கு ₹500 முதல் ₹2,000 வரை கிடைக்கும். இந்தத் தொகை மருத்துவமனை, நன்கொடையாளரின் விவரம் மற்றும் விந்தணுவின் தரம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். ஒரு நன்கொடையாளர் வாரத்திற்கு இரண்டு முறை தானம் செய்தால், மாதத்திற்கு ₹4,000 முதல் ₹8,000 வரை சம்பாதிக்க முடியும். டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் விந்தணு தேவை அதிகம் இருப்பதால் மாத வருமானம் ₹8,000 முதல் ₹15,000 வரை உயரலாம்.
ஆனால் வெளிநாடுகளில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில், விந்தணு தானம் ஒரு மரியாதைக்குரிய தொழிலாக கருதப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள சியாட்டல் விந்தணு வங்கியில் (Seattle Sperm Bank), ஒரு முறை செய்யப்படும் விந்தணு தானத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ₹8,400 கிடைக்கும். இதன் மூலம் மாதத்திற்கு சுமார் ₹1.26 லட்சம் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ளது.
கலிஃபோர்னியா விந்தணு வங்கியில் (California Sperm Bank), ஒரு முறை தானத்திற்கு சுமார் சுமார் ₹12,600 சம்பாதிக்கலாம். சராசரியாக மாதத்திற்கு சுமார் ₹58,000 முதல் ₹1 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
ஐரோப்பாவில், ஐரோப்பிய விந்தணு வங்கி (European Sperm Bank) ஒரு முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட தானத்திற்கு சுமார் ₹3,600 செலுத்துகிறது. மாதத்திற்கு நான்கு முறை வரை தானம் செய்யலாம்.
மேற்கண்ட நாடுகளில், பணம் தவிர, நன்கொடையாளர்களுக்கு இலவச உடல்நலப் பரிசோதனைகள், கருவுறுதல் சோதனைகள் மற்றும் சில சமயங்களில் வருடாந்திர உடல் பரிசோதனைகள் போன்ற கூடுதல் சலுகைகளும் கிடைக்கும்.
சமீபத்தில், ஒரு நபர் சமூக வலைத்தளத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். தனது விந்தணு தானம் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குத் தான் உயிரியல் ரீதியான தந்தை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாதம் ₹2.5 லட்சம் வரை கூடுதல் வருமானம் ஈட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக தானம் செய்து வருவதால், உலக அளவில் எண்ணற்ற குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளது தனக்கு வருமானத்தை தாண்டி இன்னொரு பெருமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.