விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு உலக அளவில் பெயர் பெற்ற நகரம். உலக அளவில் பட்டாசு உற்பத்தி அதிகம் நடைபெறும் பகுதியாக விளங்குகிறது. விருதுநகர், சிவகாசி, சாத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன.
இங்கு உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான கோடிக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெறுகிறது.
எந்த அளவிற்கு பட்டாசுத் தொழில் இங்கு புகழ்பெற்றதாக இருக்கிறதோ அதே அளவில் அடிக்கடி பட்டாசு விபத்து நடைபெறும் பகுதியாகவும் உள்ளது. இதனால் இந்தப் பகுதியில் தீயணைப்பு மீட்புப் படையினர் சற்று கூடுதல் கவனத்துடனே செயல்படுவர். அதையும் மீறி சில கோர சம்பங்கள் நடந்து விடுகிறது.
இந்நிலையில் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில் கூலித் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பணிக்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பணியை ஆரம்பித்த போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டிருக்கிறது. சற்று நேரத்தில் அந்த இடம் போர்க்களம் போல் ஆனது. இந்த பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அருகில் இருந்த மற்ற அறைகளும் முற்றிலும் சேதாரமாகியது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சிகரெட் பிடித்தால் தொண்டையில் முடி வளருமா? அரிய வகை நோய் குறித்து அதிர்ச்சி தகவல்..!
மேலும் வருவாய்த்துறை, காவல்துறையும் களத்தில் இறங்கி வெடிவிபத்திற்கான காரணத்தை அறிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று வார விடுமுறை என்பதால் பல தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் அரசின் முறையான லைசென்ஸ் பெற்ற பின்பே பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றன. இருப்பினும் அவ்வப்போது கவனக்குறைவினால் இதுபோன்ற கோர சம்பவங்கள் நடந்து துயரத்திற்குள்ளாக்குகின்றன.