ஐபிஎல் தொடரில் விராட் கோலி புதிய சாதனையை செய்துள்ள நிலையில், இன்னொரு சாதனையை நூலிழையில் அவர் மிஸ் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் இறுதி போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 190 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 191 என்ற இலக்கை நோக்கி தற்போது பஞ்சாப் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் விளையாடிய விராட் கோலி ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். அதாவது, அவர் தனது முதல் பவுண்டரியை அடித்தவுடன், ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் தவான் 768 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் இருந்த நிலையில், விராட் கோலி 769 பவுண்டரிகள் அடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில், தவான் 221 இன்னிங்ஸ்களில் செய்த சாதனையை, விராட் கோலி 258 இன்னிங்ஸ்களில் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 663 பவுண்டரிகளுடன் மூன்றாவது இடத்திலும், ரோஹித் சர்மா 640 பவுண்டரிகளுடன் நான்காவது இடத்திலும், ரஹானே 514 பவுண்டரிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்றைய போட்டியில் விராட் கோலி இன்னும் 86 ரன்கள் அடித்திருந்தால், ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக 700 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பெற்றிருப்பார். ஆனால், அவர் 43 ரன்களில் அவுட் ஆனதால், நூலிழையில் அந்த சாதனை மிஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016 ஆம் ஆண்டு 973 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி, 2024 ஆம் ஆண்டு 741 ரன்கள் எடுத்திருந்தார். இம்முறை அவர் 614 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.