திருப்பூரைக் கலக்கும் வைரல் பேனர்.. அதிக நாள் வேலைக்கு வந்தா அடிக்கும் ஜாக்பாட்

By John A

Published:

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என கோவை நகரம் அழைக்கப்படுகிறது. கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருப்பூர் போன்ற பகுதிகள் ஜவுளி மற்றும் பின்னலாடை ஏற்றுமதித் தொழிலில் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. இதனால் சென்னையைப் போலவே கோயம்புத்தூருக்கும், திருப்பூருக்கும் வேலைக்காக மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். எனினும் வேலை வாய்ப்பு என்பது அங்கு அதிகமாகவே இன்னும் இருக்கிறது. சரியான தொழிலாளர்கள் கிடைக்காமல் ஜவுளி மில் ஓனர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களை நடத்திவரும் முதலாளிகளும் அல்லல்படுகின்றனர்.

கோவை மற்றும் திருப்பூரைப் பொறுத்தவரை குறைந்த பட்சம் நாளொன்றுக்கு ஜவுளி, பின்னலாடைத் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஷிப்ட் ஒன்றுக்கு ரூ. 490-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. ஆனால் பீஸ் ரேட் வாங்கி வேலை செய்யும் போது தினமும் ரூ. 1000 வரை சம்பாதிப்பதால் டைலர்கள் பலர் இந்த வேலையையே விரும்புகின்றனர். ஆனால் பீஸ் ரேட்டுக்கு சரிவர வேலை அமையாது. இந்நிலையில் ஊழியர்களைத் தக்கவைக்கவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் பல நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்குகின்றன.

சூப்பர் மார்க்கெட்டிற்குள் காணாமல் போன நபர்.. 10 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் காத்திருந்த மர்மம்..

அந்த வகையில் திருப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வைத்துள்ள பேனர் தான் இப்போது வட மாவட்டங்களையே கலக்கி வருகிறது. அந்த பேனரில் ஆட்கள் தேவை என்ற தலைப்பில் கம்பெனி பீஸ் ரேட் முறையில் பணியாற்ற ஆட்கள் தேவை எனவும், வருடத்தில் அதிக நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வருபவர்களுக்கு முதல் பரிசாக 20,000 மதிப்பில் வாஷிங் மெஷினும், இரண்டாம் பரிசாக 15,000 மதிப்பில் டி.வி., அல்லது பீரோ அல்லது கட்டில் ஆகியவையும், மூன்றாவது பரிசாக 10,000 மதிப்பில் கிரைண்டர் அல்லது மிக்ஸி அல்லது டைனிங் டேபிள் ஆகியவையும் பரிசாக வழங்கப்படும் என அந்த பேனரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு வந்து செல்ல வசதியாக வேன் வசதியும் செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருடம் முழுக்க வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உத்திரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரைப் பொறுத்தவரை நேரிடையாக சுமார் 8 இலட்சம் தொழிலளார்களும் வட இந்தியர்கள் சுமார் 3 இலட்சம் பேரும் பனியன், பின்னலாடைத் தொழிலை நம்பி இருக்கின்றனர். இருப்பினும் இன்னமும் அங்கே வேலை ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் இதுபோன்ற கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் ஆட்களை எடுக்க முன்வந்துள்ளன நிறுவனங்கள்.