நடிகர் விஜய்யின் 68-வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகி வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வருகிற செப்டம்ர் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக மாநாட்டிற்கு திருச்சி பகுதியில் இடம் முதலில் தேர்வு செய்யப்பட்டது. அதன்பின் இங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் அதன்பின் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் இடத்தினைத் தேர்ந்தெடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மாநாடு நடைபெறும் இடத்தினை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
மேலும் மாநாடு குறித்து பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, வி.ஐ.பி-கள் வருகை, பொதுமக்கள் வருகை, தொண்டர்கள் வருகை, நிலத்தின் உரிமையாளர் அனுமதி, உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் அனுமதி என உள்ளிட்ட 21 கேள்விகளை முன் வைத்தனர். இதனால் அனுமதி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
’கோட்’ படத்தின் முதல் நாள் உண்மையான வசூல் எவ்வளவு? ரசிகர்கள் பரப்பும் தகவல் உண்மையா?
தற்போது போலீசாரின் கேள்விகளுக்கு பதிலை அறிக்கையாக தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் வழங்கியிருக்கிறார். மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடிய வி.ஐ.பி-கள், இதர அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் கண்டிப்பாக குழந்தைகளுக்கு அனுமதி கிடையாதாம். இதைத் தவிர ஆண்கள் 30,000 பேரும், பெண்கள் 15,000 பேரும், முதியோர்கள் 5,000 பேரும், மாற்றுத் திறனாளிகள் 5,00 பேரும் அமரும் வகையில் இடம் ஒதுக்கப்பட உள்ளது.
பொதுவாகவே மாநாடு என்றால் லட்சக்கணக்கான மக்கள் திரளுவார்கள். ஆனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு செப்டம்பர் 23 திங்களன்று நடைபெற உள்ளதால் கூட்டம் குறைய வாய்ப்புள்ளது. எனினும் சமூக அக்கறையுள்ள, ஆர்வமுள்ள, பொது நல நோக்கோடு செயல்படும் இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் வந்தால் போதும் என்ற வகையில் 50,000 பேர் வரும் வகையில் இருக்கைகள் போடப்பட உள்ளன.