ராகுல் காந்தி பாணியில் விஜய் ஒரு நடைபயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 38 மாவட்டங்களையும் கடந்து சென்றால் கண்டிப்பாக மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்படும் என்றும் பத்திரிகையாளர் மணி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் மீது வைக்கப்படும் ஒரே ஒரு விமர்சனம் என்னவெனில், அவர் களத்தில் இறங்காமல் உள்ளார் என்பதுதான். இதுவரை ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை காரணமாக கூறிய விஜய், தற்போது படப்பிடிப்பு முடிந்த பின்னரும் இன்னும் களத்தில் இறங்காமல் ட்விட்டரில் மட்டுமே அரசியல் செய்து வருகிறார் என்று விமர்சனம் செய்யப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில் அவர் விரைவில் களத்தில் இறங்குவார் என்று அவரது கட்சியினர் நம்பிக்கை தருகின்ற நிலையில், பத்திரிகையாளர் மணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, “விஜய் இன்னும் கிரவுண்டில் கால் வைக்கவில்லை. அவர் களத்தில் இறங்கினால்தான் அவரால் மக்கள் எழுச்சி ஏற்படும். குறிப்பாக, கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஒரு நடைபயணத்தை அவர் 38 மாவட்டங்களையும் கடந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும். அப்படி ஒரு நடைபயணம் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அது மட்டும் நடந்தால் விஜய்க்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவில் போராட்டங்களை கையில் எடுக்க வேண்டும் என்றும், மக்கள் பிரச்சனைகளுக்காக அவர் களமிறங்க வேண்டும் என்றும், விஜய் நேரடியாக களத்தில் இறங்கினால் மட்டுமே அவரது கட்சிக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியலுக்கு வரும் தலைவர்கள் பாதயாத்திரை மூலம் மக்களை சந்திப்பதால் அனுபவம் பெறுவார்கள் என்றும், மக்களுடைய பிரச்சனை என்ன என்பது அவர்களுக்கு புரியும் என்றும், மகாத்மா காந்தியின் நடைபயணம் முதல் ராகுல் காந்தியின் நடைபயணம் வரை அதுதான் நடந்தது என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
விஜய்யும் அதேபோன்ற ஒரு பாதயாத்திரை விரைவில் மேற்கொள்வார் என்றும், குறிப்பாக அவர் நகரங்கள் மத்தியில் பாதயாத்திரை செல்லாமல் கிராமப் பகுதிகள் வழியாக பாதயாத்திரை செல்ல திட்டமிட்டு வருவதாகவும், அவரது பாதயாத்திரை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விஜய் மட்டும் பாதையாத்திரை தொடங்கிவிட்டால், கண்டிப்பாக “நீ நடந்தால் நடை அழகு” என மக்கள் மற்றும் அவரது கட்சி தொண்டர்கள் அவரை போற்றிப் புகழ்வார்கள் என்பது மட்டும் உறுதி.