கடந்த பல ஆண்டுகளாக, திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சிறுபான்மையினர் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகள் இருந்து வந்துள்ளன. இந்த வாக்குகள் மொத்தமாக திமுகவுக்குக் கிடைப்பதால் தான், சில தேர்தல்களில் அக்கட்சி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த முக்கிய அடித்தளத்தை நடிகர் விஜய் உடைத்து வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதால், அவருக்கு கிறிஸ்தவ வாக்குகள் கணிசமாக விழலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை சந்தித்த பிறகு, அரசு ஊழியர்களின் வாக்குகளும் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை, குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை, திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்பதால், அவர்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இம்முறை அரசு ஊழியர்களின் வாக்குகள் விஜய் கட்சிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் வாக்குகளும் விஜய்க்கு ஓரளவு திரும்பலாம் என்பதால், திமுகவின் அஸ்திவாரம் பலவீனமடையலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, விஜய்க்கு புதிய வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. விஜய்யின் ரசிகர்கள் மட்டுமின்றி, கல்லூரி மாணவ மாணவிகளும் அவருக்கு வாக்களிப்பார்கள் என்றும், அவர்கள் தங்கள் பெற்றோர்களையும் வாக்களிக்க வலியுறுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால், விஜய்க்கு கூடுதல் சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
விஜய் தனியாக ஒரு கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கிறாரோ இல்லையோ, கண்டிப்பாக இரண்டு திராவிட கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க விட மாட்டார் என்பதில் உறுதியாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், 2026 ஆம் ஆண்டு தேர்தல் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டசபை அமையும் வகையில் தான் இருக்கும் என்று பலரும் கணித்துள்ளனர். இந்த கணிப்புகள் எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் ’பயபுள்ளைங்கள மிரட்டுறது எனக்கு கைவந்த கலை’ என்ற சினிமா வசனம் போல் இரண்டு கூட்டணிகளையும் விஜய் தனி ஆளாக மிரட்டி வருவதாக தெரிகிறது.
Is Vijay Shattering DMK’s Foundation? – Political Analysts’ Prediction!
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
