நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்! தமிழ்நாடு இனி சிறக்கும்!! களத்தில் இறங்கிய விஜய்..!

Published:

Vijay Flag: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், நாளை தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய உள்ளதை அடுத்து இன்று அவர் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

“சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

இதுவரை சமூக வலைதளத்தில் அறிக்கை விடுவதில் மட்டுமே அரசியல் செய்துவரும் விஜய் என்று விமர்சனம் எழுந்த நிலையில் நாளை முதல் களத்தில் இறங்கி கொடியேற்ற உள்ளார் என்பதும் அதன் பிறகு அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்பே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...