2026 ஆம் ஆண்டு தேர்தலில் ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விஜய் தான் என்றும், விஜய் இல்லாமல் எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். விஜய் தனித்து ஒரு வலுவான கூட்டணி அமைத்தால், எம்.ஜி.ஆர். பிறகு முதல்வராகும் முதல் நடிகர் விஜய் தான் என்ற பெருமையை பெறுவார் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுவரை தமிழ் திரையுலகில் உள்ள எத்தனையோ நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கியுள்ளனர். சிவாஜி கணேசன் முதல் கமல்ஹாசன் வரை கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பிரபல நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கினாலும், அவர்கள் கட்சிகள் எந்த விதமான தாக்கத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியவில்லை.
சிவாஜி கணேசன் கட்சி தொடங்கி, அவரே திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதேபோல், கமல்ஹாசனும் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். விஜயகாந்த் கட்சி ஓரளவு மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த போதிலும், அவர் தனது முதல் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் அவர் மட்டுமே வெற்றி அடைந்தார். மற்ற அவரது கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் அவர்கள் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை வராததற்கு ஒரே காரணம், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக வருவேன் என்று கூறுவார்கள். ஆனால், அதன் பின் ஒரு தேர்தல் அல்லது இரண்டு தேர்தலை சந்தித்த பின்னர் திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்து விடுகிறார்கள். விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே அந்த தவறைத்தான் செய்தனர். அதனால்தான் தற்போது அவர்களது கட்சி கிட்டத்தட்ட காணாமல் போய் உள்ளது.
2 திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருவதை பார்த்து வெறுத்து போயுள்ள மக்கள், மூன்றாவது ஆக ஒரு நல்ல தலைவர் வருவாரா என்ற ஏக்கத்தில் பல ஆண்டுகளாக உள்ளனர். அந்த ஏக்கம் 2026 இல் தீர்ந்துவிடும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மீது மக்களுக்கு தற்போது அதிக நம்பிக்கை உள்ளது. இளம் வயது மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு உள்ளது. அவர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம் என்பது போன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டிருப்பதை பார்க்கும்போது, கண்டிப்பாக எம்.ஜி.ஆர். பிறகு விஜய் தான் தமிழகத்தின் முதல்வராகும் நடிகராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், அ.தி.மு.க., தி.மு.க.வை தோற்கடிக்கும் வகையில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கிவிட்டால், அவர்தான் முதல்வர் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணிக்கு அவர் கொண்டு வந்துவிட்டால், அவர்தான் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஹீரோ மற்றும் ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகளும் இரண்டு திராவிடக் கூட்டணியில் மாறி மாறி இடம் பெற்று வெறுப்பில் உள்ள நிலையில், ஒரு புதிய தலைமையின் கீழ் அனைத்து கட்சிகளும் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.