2 சீட் ஜெயிச்சாலும் சொந்த சின்னத்தில ஜெயிச்சவங்க இன்னிக்கு அமைச்சர் ஆகிட்டாங்க.. 3 எம்.எல்.ஏ வச்சிருக்கிற மதிமுக, உதயசூரியன் சின்னத்துல நின்னதுனால நட்டாத்துல நிக்குது.. இன்னொரு கட்சி சின்னத்துல போட்டியிடுவதற்கு எதுக்கு அரசியல் கட்சி நடத்தனும்.. விசிக, முஸ்லீம் லீக்கிற்கு இருந்த தைரியம் வைகோவுக்கு இல்லையா? பம்பரம் சின்னத்தில் நின்றிருந்தால் இன்று மதிமுகவிலும் ஒரு அமைச்சர் இருந்திருப்பார்… இனிமேல் புலம்பி என்ன பயன்?

தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும், தேர்தல்களின் போது கூட்டணி கட்சிகள் பிரதான கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதும் காலங்காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறையாகும். ஆனால், அவ்வாறு மற்றுமொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற…

stalin thiruma vaiko

தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும், தேர்தல்களின் போது கூட்டணி கட்சிகள் பிரதான கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதும் காலங்காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறையாகும். ஆனால், அவ்வாறு மற்றுமொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, சட்ட ரீதியாக ஏற்படும் சிக்கல்களை பற்றி அரசியல் கட்சிகள் பல நேரங்களில் தீவிரமாக சிந்திப்பதில்லை.

தற்போதைய அரசியல் சூழலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சந்திக்கவிருக்கும் ஒரு மிகப்பெரிய தர்மசங்கடமான நிலை இதற்கு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்காலம், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் எவ்வாறு கேள்விக்குறியாகியுள்ளது என்பதை அரசியல் விமர்சகர்கள் தற்போது கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

இந்திய அரசியலமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள கட்சி தாவல் தடைச்சட்டம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் கடுமையானது ஆகும். இந்த சட்டம் எவ்வளவு வலிமையாக உள்ளது என்பதற்கு ஒரு சுவாரசியமான உதாரணத்தை கூறலாம். அண்மையில் முதல்வர் விஜய் அவர்கள் வைகோ இல்லத்திற்கு சென்றபோது, தனது குடும்பத்தினர் மற்றும் பணிப்பெண்களை அறிமுகப்படுத்தி, இவர்கள் உங்களுக்குத்தான் வாக்களித்தார்கள் என்று கூட குறிப்பிட்டார். ஒருவேளை அந்த சமயத்தில், மதிமுக சார்பில் திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கு இருந்து, அவர்கள் விஜய்யுடன் ஒரே மேடையிலோ அல்லது புகைப்படத்திலோ தோன்றியிருந்தால், அவர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, மாற்று அரசியல் தலைவருடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மேடைகளைப் பகிர்வது, ஏன் ஒரு திருமண மேடையில் கூட ஒன்றாக நிற்பது போன்ற செயல்களுக்கு எதிராக கட்சித் தலைமை புகார் அளித்தால், அவர்களின் பதவி பறிபோகும் அளவுக்குச் சட்டம் ஸ்ட்ராங்காக உள்ளது.

இத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையில் தான், மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ, “திமுக உடனான கூட்டணியை தொடர்வதா இல்லையா என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்” என்று மிக சாதாரணமாகக் கூறி வருகிறார். மேலும், வைகோ அவர்களும் ஆளுநர் மாளிகை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, பழைய தொகுதி பங்கீட்டுக் கதைகளையும், தங்களுக்கு குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்ட விபரங்களையும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இவர்கள் தங்களின் பொதுக்குழுவை கூட்டி, திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவது என்ற முடிவை ஒருவேளை எடுப்பார்களேயானால், உதயசூரியன் சின்னத்தில் வென்ற அந்த இரண்டு மதிமுக எம்.எல்.ஏ-க்களின் கதி என்ன ஆகும் என்ற கேள்விக்கு மதிமுக தலைமை பதில் சொல்லியாக வேண்டும். அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், இல்லையெனில் திமுகவின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கும்.

உண்மையில், மதிமுக தனது சொந்த சின்னத்திலேயே நின்று போட்டியிட்டிருக்கலாம் என்ற புலம்பலும், ஆதங்கமும் தான் தற்போது அவர்களின் பேச்சில் வெளிப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விசிக போன்ற கட்சிகள் தங்களின் சொந்த சின்னத்தில் நின்று போட்டியிட்டு, கணிசமான இடங்களை வென்று இன்று அதிகார பங்கீட்டை அனுபவித்து வருகின்றனர். ஆனால், தொகுதிப் பங்கீட்டின் போது திமுக தலைமை “உங்களுக்கு 4 இடங்கள் தான், அதுவும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்” என்று கறாராகக் கூறியபோதே மதிமுக விழித்துக் கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, அன்று சுய கௌரவத்தை விட்டுக்கொடுத்துவிட்டு, இன்று கூட்டணியை விட்டு வெளியேற நினைத்தால் அது தங்களின் சொந்த எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கும் வினையாக முடிந்துவிடும்.

கூட்டணி மாற நினைக்கும் மதிமுக, இன்று ஒரு ‘திரிசங்கு சொர்க்கத்தில்’ நிற்பதைப் போன்ற நிலையில் தான் உள்ளது. பொதுக்குழுவில் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடனோ அல்லது வேறு ஏதேனும் ஒரு புதிய கூட்டணியிலோ இணைய வைகோ முடிவு செய்தால், இந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களும் வைகோவின் பேச்சைக் கேட்டுத் தங்களின் பதவிகளைத் துறக்கத் தயாராக இருக்கிறார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், அவர்கள் சட்ட ரீதியாக திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். அவர்களால் திமுக சின்னத்தில் நீடித்துக் கொண்டே, வைகோவின் புதிய கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரமோ அல்லது அரசியல் நகர்வுகளையோ செய்யவே முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், தேர்தல் நேரத்தில் தற்காலிக லாபத்திற்காகப் பிற கட்சிகளின் சின்னங்களை வாங்கிப் போட்டியிடும் கட்சிகளுக்கு, இந்தச் சட்டம் ஒரு மிகப்பெரிய பாடம் புகட்டியுள்ளது. நடைமுறையில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் சில காலதாமதங்களோ அல்லது அரசியல் தந்திரங்களோ கையாளப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டால் பதவி பறிபோவது உறுதி. எனவே, திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது என்ற முடிவை எடுக்கும் முன்பாக, மதிமுக தலைமை தங்களின் சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தை முழுமையாக இழக்கத் தயாராக இருக்கிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில், வற்றாத புலம்பல்களோடு திமுகவின் நிழலிலேயே தொடர வேண்டிய கட்டாயத்திற்கு மதிமுக தள்ளப்படும்.