சென்னை : உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகப் போகிறார் என்று செய்திகள் வந்த நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் இன்று நடைபெற்ற விழாவில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். திமுக இளைஞரணியின் 45 வது ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து இளைஞரணி நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
விழாவில் அவர் பேசும் போது, “திமுக தலைவர் ஸ்டாலின் எந்த பொறுப்புக்குச் சென்றாலும் அவர் மனதிற்கு மிக நெருக்கமாக இருந்தது இளைஞரணி பொறுப்பு தான். அதேபோல் தான் எனக்கும் இளைஞரணி செயலாளர் பொறுப்பு என் மனதிற்கு மிக நெருக்கமானது.
எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன். நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றியைப் பெற்றது போல அடுத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிக்காக உழைக்க வேண்டும். திமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடையே எடுத்துக் கூற வேண்டும்.
நான் துணை முதல்வர் ஆகப் போகிறேன் என்று செய்திகளும், வதந்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆம் நாங்கள் துணையாக இருப்போம். முதல்வருக்கு துணையாக அனைத்து அமைச்சர்களும் இருப்போம்.” என்று பேசினார்.
இன்னும் சில நாட்களில் தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான சூழ்நிலையில் உதய நிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என பேச்சு அடிப்பட்டது. ஆனால் தற்போது உதயநிதியின் இந்த பதிலால் துணை முதல்வர் பதவிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் அமைச்சரவையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.