உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்

Published:

தமிழக அமைச்சரவையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞர்நலன், விளையாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் மேலும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது எனவும் செய்திகள் வந்தன. இது பற்றி செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதியிடம் கேட்டபொழுது, எல்லா அமைச்சர்களும் முதல்வருக்குத் துணையாகத் தான் இருக்கிறோம் என்று பதில் கூறினார்.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் துணை முதல்வர் பதவி குறித்த செய்திகள் வெளியானது. இதற்கு உதயநிதி அவரே முன்பு கூறியதைப் போலவே பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு வர வாய்ப்புள்ளதை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன் உறுதிப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.

இராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்ட துவக்க விழாவில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசும் போது, “துணை முதலமைச்சர் உதயதிதி ஸ்டாலின்.. ஸாரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. ஆகஸ்ட் 19-க்குப் பிறகுதான் துணை முதல்வர் என்று கூற வேண்டும்” என்று பேசினார்.

இராஜ கண்ணப்பனின் இந்தப் பேச்சு தற்போது மீடியாக்களில் தலைப்புச் செய்தியாக வருகிறது. துணை முதல்வர் பதவி குறித்து இதுவரை பிடிபடமால் பேசிய உதயநிதி ஸ்டாலின் பதவி குறித்து இராஜகண்ணப்பன் உறுதி செய்யும் விதமாக பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் 19-க்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும் உங்களுக்காக...