தமிழக அரசியலில் காலங்காலமாக நிலவி வந்த இருமுனை போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “மக்களை ஏமாற்றி சுரண்டுபவர்களுக்கு ஆப்பு வைப்போம்” என்ற முழக்கத்துடன் உதயமானது தமிழக வெற்றி கழகம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, மற்றுமொரு நடிகர் வருகிறார் என்று பலரும் இதை மேலோட்டமாகவே பார்த்தனர். ஆனால், கட்சி அறிவிக்கப்பட்ட நாள் முதல் விஜய் எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் மற்றும் அவரது அதிரடி பேச்சுக்கள் தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகளை நிலைதடுமாற செய்துள்ளன.
குறிப்பாக, அதிமுகவை ஒரு தாயில்லாப் பிள்ளை என்ற பரிதாப நோக்கில் அணுகும் அவர், ஆளுங்கட்சியான திமுகவை மட்டும் தனது பாணியில் துவைத்து காயப்போட்டு அயர்ன் செய்துவிட்டார். ஒவ்வொரு மேடையிலும் அவர் முன்வைக்கும் விமர்சனங்கள், ஆளுங்கட்சியின் நிர்வாக திறமையின்மையை நேரடியாக தாக்குவதாக அமைந்துள்ளன.
தற்போது தமிழகத்தின் எந்தவொரு அரசியல் விவாதத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் பிரதானமாக இருப்பது விஜய்யும் அவரது தவெகவும் தான். தொலைக்காட்சி விவாதங்களில் திமுக மற்றும் அதிமுக பிரதிநிதிகள் விஜய்யை பற்றிப் பேசுவதையே முழுநேர பணியாக கொண்டுள்ளனர். அவர் டெபாசிட் வாங்க மாட்டார் என்று ஒருபுறம் கிண்டலடித்தாலும், மறுபுறம் அவர் எந்த தொகுதியில் எவ்வளவு வாக்குகளை பிரிப்பார் என்ற அச்சம் கலந்த விவாதங்களே நீடிக்கின்றன. நாள்தோறும் “விஜய், விஜய், விஜய்” என இக்கட்சிகள் உச்சரிப்பது, விஜய்யின் வருகை இவர்களின் தூக்கத்தை தொலைத்துவிட்டது என்பதையே உறுதிப்படுத்துகிறது. எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டாலும், இம்முறை திமுகவோ அல்லது அதிமுகவோ தனிப்பெரும் மெஜாரிட்டியை பெறுவது கடினம் என்பது அரசியல் களத்தின் நிதர்சனமாக மாறியுள்ளது.
திமுகவின் வரலாற்றை பார்த்தால், அந்த கட்சிக்கு தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி அமைக்கும் ராசி என்பது அரிதாகவே இருந்துள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதி போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்த காலத்திலேயே, மக்கள் அதிருப்தி காரணமாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் உள்ளன. “விடியல் ஆட்சி” என்று கூறப்பட்டாலும், களத்தில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகளை மங்கச் செய்துள்ளன. இதனால் திமுகவின் வாக்கு வங்கி சரிவதை யாராலும் தடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மறுபுறம், திமுக ஆட்சிக்கு வராவிட்டால் தாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என்ற கனவில் இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, விஜய்யின் எழுச்சி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆட்சி எதிர்ப்பு வாக்குகளை எளிதாக அறுவடை செய்யலாம் என்று நினைத்திருந்த வேளையில், எங்கு பார்த்தாலும் காதுகளில் “விசில்” சத்தம் கேட்பது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் பகுதியை விஜய் அபகரித்து விடுவார் என்ற பயம், அக்கட்சியின் மூத்த தலைவர்களை இரவு நேரங்களில் தூங்க விடாமல் செய்வதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை அதிமுகவிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது ஒவ்வொரு பேச்சிலும் வெளிப்படுகிறது. இத்தனை காலம் மக்களை ஏமாற்றி பிழைத்தவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க ஒரு புதிய சக்தி வந்துவிட்டது என்ற நம்பிக்கை மக்களிடையே துளிர்விட்டுள்ளது. மே மாதம் தேர்தல் முடிவுகள் வரும்போது, பாரம்பரிய கட்சிகளின் கணக்குகளை தகர்த்துவிட்டு, தவெகவின் அசுர வளர்ச்சி தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அதிரடி ஆட்டம் இனிவரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் என்பதால், மற்ற கட்சிகள் தங்களது இருப்பை தக்கவைக்க பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
