அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் கடுமையான வரி நடவடிக்கைகளை 90 நாட்கள் நிறுத்தி வைத்த நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை கரடியின் பிடியில் சென்றது. இதனால் டிரம்ப் தனக்குத் தானே ஆப்பு வைத்து கொண்டதாக விமர்சனம் செய்யப்படுகிறது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகமான வரி உயர்வை அமெரிக்கா அறிவித்தது. இந்த அறிவிப்பு உலக சந்தைகளை கதிகலங்க வைத்தது. உலகம் முழுவதும் வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவானது
டிரம்ப் நிர்வாகம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரி விதிக்கப்படும் என அறிவித்தவுடன், உலக பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ந்தன. அமெரிக்க பங்குச்சந்தையும் கடும் சரிவு ஏற்பட்டது. Dow Jones குறியீடு ஒரு கட்டத்தில் 2,100 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ந்தது, பின்னர் சற்று மீண்டபோதும் 1,014 புள்ளிகள் இழந்த நிலையில் முடிந்தது. S&P500 3.46% வீழ்ந்தது, Nasdaq 4.31% குறைந்தது. இதில் தொழில்நுட்ப பங்குகள் பெரிய அளவில் விற்கப்பட்டதால் பெரும் சரிவு ஏற்பட்டது.
அதேபோல் டெஸ்லா 8% வீழ்ந்தது, ஆப்பிள் 4% க்கும் மேலாக குறைந்தது, நிவிடியா மற்றும் மெட்டா தலா 7% வரை வீழ்ந்தன. கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் அலுமினியம், கார்கள் ஆகிய பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டது.
ஆனால் வரிவிதிப்பு முறையை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில் நேற்று ஆசியா-பசிபிக் சந்தைகள் நம்பிக்கையுடன் உயர்ந்தன. ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 9.13% உயர்ந்து 34,609 ஆகவுள்ளது. டோபிக்ஸ் குறியீடு 8.09% உயர்ந்தது.
தென் கொரியாவின் கோஸ்பி 6.60% உயர்ந்தது, கோஸ்டாக் 5.97% உயர்ந்தது. ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200 4.54% அதிகரித்தது. ஹாங்காங் ஹாங் செங் குறியீடு 2.06% உயர்ந்தது. ஆனால் டிரம்ப் வரி விதிப்பை நிறுத்தி வைத்ததில் அமெரிக்க பங்குச்சந்தைக்கு எந்த லாபமும் இல்லை. இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வரி விதிப்பை அறிவித்து, அதன்பின் நிறுத்தி வைத்ததால் உலக பங்குசந்தைகளை விட அமெரிக்க பங்குச்சந்தைக்கு அதிக நஷ்டம் என கூறப்படுவதால் டிரம்ப் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டதாகவே கருதப்படுகிறது.