தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், மாநிலத்தின் சட்ட ஒழுங்கு மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு விவாதங்கள் எழ தொடங்கியுள்ளன. குறிப்பாக, அண்மை காலங்களாக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவர்கள் மற்றும் சட்டத்தை மீறியவர்கள் மீது காவல்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் ஒருபுறம் பாராட்டப்பட்டாலும், மற்றொருபுறம் காவல்துறையின் அணுகுமுறையில் ஒருதலைபட்சம் நிலவுகிறதோ என்ற கேள்வியையும் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்வதில் காட்டப்படும் வேகம், நபர் வாரியாக மாறுபடுகிறதா என்ற சந்தேகம் தற்போதைய தவெக அரசின் நிர்வாக திறனுக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.
பாஜகவிலிருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா மீது புகார் அளிக்கப்பட்ட உடனே காவல்துறை அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்ததையும், அதேபோல முதலமைச்சரை அவதூறாக பேசியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது புகார் பெறப்பட்ட சில மணி நேரங்களிலேயே சென்னை போலீஸ் மதுரை கேம்ப் அடித்து அதிரடியாக கைது செய்ததையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். காவல்துறையினரால் நினைத்தால் மிக குறுகிய காலத்திற்குள், மாநிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை பிடித்துவிட முடிகிறது என்பது இந்த இரு சம்பவங்களின் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த அசாத்திய வேகம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அவர்களுக்கு இருக்கும் கடமை உணர்வை காட்டுகிறது.
இருப்பினும், இதே வேகம் மற்றும் தீவிரத்தன்மை சில நாட்களாக தலைமறைவாக இருக்கும் முக்தார் போன்றவர்களின் விவகாரத்தில் ஏன் வெளிப்படவில்லை என்ற நியாயமான ஆதங்கம் மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இத்தனை நாட்கள் ஆகியும் முக்தாரை மட்டும் இன்னும் ஏன் காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை என்ற கேள்விக்கு தகுந்த பதில் இல்லை. நவீன தொழில்நுட்பங்களும், உளவுத்துறையின் பலமும் கொண்ட தமிழக காவல்துறையால், அவர் எங்கே ஒளிந்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது அவரை பிடிப்பதில் ஏதேனும் அரசியல் முட்டுக்கட்டைகள் இருக்கின்றனவா என்ற சந்தேக கணைகள் தவெக அரசை நோக்கி திருப்பப்படுகின்றன.
முந்தைய திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் இத்தகைய ஒருதலைபட்சமான அல்லது அரசியல் பின்னணி கொண்ட காவல்துறை நடவடிக்கைகள் அரங்கேறுவது வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஆனால், வாரிசு அரசியலுக்கும், பழிவாங்கும் அரசியலுக்கும் மாற்றாக, நேர்மையான நிர்வாகத்தை தருவோம் என்று முழங்கி பதவியேற்ற முதலமைச்சர் விஜய்யின் புதிய அரசிலும் இப்படி ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் தொடரலாமா என்ற வருத்தம் நடுநிலையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருதலைப்பட்சமாக செயல்படுவது புதிய அரசின் மீதான நம்பகத்தன்மையை குலைத்துவிடும் என்பதால், அனைத்து குற்றவாளிகளையும் ஒரே தராசில் வைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
தமிழக மக்கள் தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் மீதும், அவரது புதிய தவெக அரசின் மீதும் அளவுகடந்த அன்பையும், அபாரமான நம்பிக்கையையும் வைத்துள்ளனர். பழைய அரசியலை தூய்மைப்படுத்தி, அனைவருக்கும் சமமான நீதியையும், பாதுகாப்பையும் இந்த இந்த அரசு வழங்கும் என்றுதான் ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆவலோடு காத்து கொண்டிருக்கிறது. எனவே, மக்களின் அந்தப் புனிதமான நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பும் கடமையும் முதலமைச்சர் விஜய்யின் கைகளில்தான் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதன் காரணமாக, தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் அல்லது சாதிய, மத பின்னணிகளை பார்க்காமல், சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சருக்கு முன்வைக்கப்படுகிறது. “தப்பு செஞ்சவங்க யாராக இருந்தாலும் தூக்குங்க சிஎம் சார்” என்று பொதுமக்கள் தங்களின் தார்மீக குரலை எழுப்பி வருகின்றனர். இன்னும் ஐந்து ஆண்டுகால ஆட்சி பொறுப்பில், இத்தகைய நடுநிலையான மற்றும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே, விஜய் தனது பொற்கால ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட முடியும் என்பது திண்ணம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
