இந்தியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்படுகிறதா? மத்திய அரசு தீவிர பரிசீலனை..!

Published:

கடந்த சில நாட்களாகவே டெலிகிராம் செயலி குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பாக டெலிகிராம் செயலி சிஇஓ பாவெல் துரோவ் என்பவர் பிரான்ஸ் அரசால் கைது செய்யப்பட்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் டெலிகிராம் செயலியை இந்தியா உள்பட சில நாடுகளில் தடை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு டெலிகிராம் செயலியை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டெலிகிராம் செயலியில் மிரட்டி பணம் பறித்தல், சூதாட்டம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகம் இருப்பதாகவும் இது குறித்து எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் மத்திய அரசு அந்த செயலியை தடை செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் பெரும்பாலும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில் டெலிகிராம் செயலியும் தகவல் பரிமாற்றத்திற்கான செயலி என்று ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டாலும் இந்த செயலி இந்திய அரசின் பல விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றும் உலகம் முழுவதும் இந்த செயலின் நடவடிக்கைக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது.

பணப்பரிமாற்றத்தில் மோசடி, போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக புதிய திரைப்படங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அஜர்பைஜானில் இருந்து பாரிஸ் விமான நிலையம் வந்த டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ்  என்பவர் கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

ரஷ்யாவை சேர்ந்த பாவெல், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா என இரட்டை குடியுரிமை பெற்ற நிலையில் அவரது கைது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கைதுக்கு  எலான் மஸ்க் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் இது ஒரு அரசியல் ரீதியான கைது நடவடிக்கை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் பிரான்ஸ் அரசு சட்டப்படி தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளது. டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தியா உள்பட பல நாடுகள் இந்த செயலியை தடை செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...