தமிழகம் முழுவதும் சுமார் 3500 ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. இவற்றில் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களான நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களிலிருந்து தினசரி ஏராளமான பேருந்துகள் சென்னை, பெங்களுர் நோக்கி வருகின்றன. இதனால் சாதாரண நாட்களில் கூட ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுகள் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. அதிலும் பண்டிகை நாட்களில் மும்மடங்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊர் கிளம்பி வருவதே ஓர் பெரிய சவாலாகவும், அதிக பண இழப்பும் ஏற்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் ஆம்னி பேருந்துகளில் 650-க்கும் மேற்பட்டவை வெளிமாநில பதிவெண் கொண்டு இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்துள் அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்று தினசரி பயணிகளை ஏற்றிக் கொண்டு வருகின்றன. இது விதிமுறை மீறலாகும். மேலும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளும் மிகுந்த பாதிப்படைகிறது. இவ்வாறு ஏஐடிபி உரிமம் பெற்ற சுமார் 652 பேருந்துகளையும் தமிழக பதிவெண் TN -க்கு மாற்றுமாறு அண்மையில் போக்குவரத்துத்துறை ஆம்னி பஸ்களுக்கு சுற்றறிக்கை விடுத்தது. அவற்றில் சுமார் 100 பஸ்கள் மட்டுமே முறைப்படி TN பதிவெண் கொண்ட பேருந்துகளாக மாற்றப்பட்டன.
மாஸ்டர் பிளான் போடும் பிரசாந்த் கிஷோர்.. 2025-ல் நடக்கப் போகும் அதிரடி அரசியல் திருப்பம்..
பெரும்பாலான பேருந்துகள் அரசின் உத்தரவை மதிக்காமல் இன்னும் வெளிமாநில பதிவெண்படியே இயங்கி வருகிறது. இதனால் அரசுக்கு தொடர்ந்து வரி ஏய்ப்பும், விதிமுறை மீறலும் ஏற்படவே ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இனி வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது எனவும், அப்படி அவை தெரியாமல் இயங்கினால் உடனடியாக அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், எனவே பயணிகள் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. அவ்வாறு மீறி பதிவு செய்து பயணிக்கும் போது இடையில் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு பொறுப்பேற்காது எனவும் எச்சரித்துள்ளது.
எனவே ஆம்னி பேருந்துகளில் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளில் முன்பதிவு செய்யவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.