ஏழை பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. 1.5 லட்சத்தை கட்ட தேவையில்லை.. மத்திய அரசு உதவி

Published:

சென்னை: கிராமப்புற மற்றும் தொழில் தொடங்கும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, உத்யோஜினி என்ற பெயரில் ஏழை பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்குகிறது. அந்த திட்டம் பற்றி பார்ப்போம்.

ஆண்களைபோல் பெண்கள் சுயமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று விரும்பும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பெண்கள் சுயஉதவிக்குழுவில் சேர்ந்த கடன் பெற்று தொழில் தொடங்கலாம். பல்வேறு தேவைகளுக்கு அந்த பணத்தை பயன்படுத்த முடியும். சுயஉதவிக்குழு கடன் மட்டுமல்ல, பெண்களுக்கான இன்னும் நிறைய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான இரண்டு திட்டங்களை பற்றி பார்ப்போம்.

ஏழை பெண்கள், கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் சுயதொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்று விரும்பிய மத்திய அரசு அன்னபூர்ணா யோஜனா திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதாவது உணவு தொழிலில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

அதேபோல் பெண்களுக்காக உத்யோஜினி என்ற திட்டம் மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டப்படி பெண் தொழில் முனைவோர், பெண் வியாபாரிகள் பலன் பெறலாம். ஏழை பெண்கள் வியாபரத்தை ஆரம்பிக்க மத்திய அரசு வட்டியில்லாமல் கடன் தந்து உதவுகிறது.

மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டு கழகத்தில் உத்யோஜினி படி ஏழை பெண்கள் வர்த்தகம் செய்ய மத்திய அரசு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்குகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினை சேர்ந்த பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். ரூ.3 லட்சம் கடன் வாங்கினால் ரூ.1.50 மட்டும் திருப்பி செலுத்தினால் போதும். இந்த கடன்தொகையை பெற எந்த ஜாமீனும் தேவையில்லை… மேலும் இந்த கடனை வழங்க பிராசசிங் பீஸ் அது இது என்று எதுவுமே வங்கிகள் கட்டணமாக வசூலிக்க மாட்டார்கள்.

இந்த கடனை பெற விரும்பும் பெண்கள் ஏற்கனவே வங்கிகளில் வாங்கிய கடனை உரிய காலத்தில் செலுத்தியிருக்க வேண்டும். இந்தக் கடன் வழங்கும் போது பட்டியல் இன பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 18 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இந்த கடன் திட்டத்தில் பணம் பெற முடியும்.

இந்த திட்டத்தில் கடன் பெற வேண்டுமானால் ஊழியரின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, பிறப்பு சான்றிதழ், முகவரி சான்று, வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, பிபிஎல் கார்டு, வங்கி பாஸ்புக் நகல் போன்றவற்றை எடுத்துக்கொணடு அருகில் உள்ள வங்கியில் கேளுங்கள். அதேநேரம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் உங்களுக்காக...