கட்சி ஆரம்பித்த நடிகர்களும் அவர்களின் தோல்விகளும்.. எம்ஜிஆர் மட்டுமே விதிவிலக்கு.. எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்யா? காலம் மாறுகிறது, களமும் மாறுகிறது

தமிழக அரசியல் வரலாற்றில், திரை நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்துள்ளனர். எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை, பல நடிகர்கள் அரசியலில் நுழைந்து தங்கள் செல்வாக்கை நிரூபிக்க முயன்றுள்ளனர். ஆனால், எம்.ஜி.ஆரை…

vijay mgr

தமிழக அரசியல் வரலாற்றில், திரை நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்துள்ளனர். எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை, பல நடிகர்கள் அரசியலில் நுழைந்து தங்கள் செல்வாக்கை நிரூபிக்க முயன்றுள்ளனர். ஆனால், எம்.ஜி.ஆரை தவிர வேறு எந்த நடிகரும் தமிழகத்தில் வெற்றிகரமான அரசியல் தலைவராக உருவெடுக்கவில்லை. எம்.ஜி.ஆர்-க்கு பிறகு, அந்த வெற்றிடத்தை விஜய் நிரப்புவாரா என்ற கேள்வி தற்போது அரசியல் களத்தில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆரும், விதிவிலக்கான அவரது வெற்றியும்

எம்.ஜி.ஆர் மட்டுமே கட்சி தொடங்கி தமிழகத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்த ஒரே நடிகர். அவரது வெற்றிக்கு பின் சில முக்கிய காரணிகள் உள்ளன:

திராவிட இயக்கத்தின் பின்புலம்: எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, பல ஆண்டுகளாக தி.மு.க-வில் ஒரு முன்னணி தலைவராகவும், நட்சத்திர பேச்சாளராகவும் இருந்தார். தி.மு.க-வுக்காக அவர் ஆற்றிய தேர்தல் பிரச்சாரங்கள், கட்சிக்கு பெரும் பலம் சேர்த்தன.

கருணாநிதியுடனான கருத்து வேறுபாடு: கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அ.தி.மு.க-வை தொடங்கியபோது, தி.மு.க-வில் இருந்த பல முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் அவருடன் இணைந்தனர். இது அவரது கட்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

மக்கள் செல்வாக்கு: ஒரு நடிகராக அவர் பெற்ற மக்கள் செல்வாக்கு, அரசியல் தலைவராக அவரது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அவரது திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள், சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் நாயகனாக அவரை நிலைநிறுத்தின.

எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றி ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; அது பல தசாப்த கால அரசியல் ஈடுபாடு, மக்கள் தொடர்பு மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் உருவானது.

நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகளும் அவற்றின் தோல்விகளும்

எம்.ஜி.ஆருக்குப் பிறகு, பல நடிகர்கள் தங்கள் சொந்த கட்சிகளை தொடங்கினர். ஆனால், அவர்களால் மக்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

சிவாஜி கணேசன்: ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியை தொடங்கினார். 1989 தேர்தலில் அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. சிவாஜியே திருவையாறு தொகுதியில் தோல்வி அடைந்தார்.

பாக்யராஜ்: ‘எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சி தேர்தலில் போட்டியிட்டதா என்று கூட தெரியவில்லை.

டி. ராஜேந்தர்: ‘தாயக மறுமலர்ச்சிக் கழகம்’ என்ற கட்சியை நிறுவினார். தேர்தலில் படுதோல்வி தான் கிடைத்தது.

விஜயகாந்த்: ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, ஒரு கட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவும் திகழ்ந்தார். இருப்பினும், அவரது கட்சி நீண்டகாலம் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

கார்த்திக்: ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யை நிறுவினார். கட்சி பெயருக்கு மட்டுமே இருந்தது.

சரத்குமார்: ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’யை நிறுவினார். பல ஆண்டுகாலம் அரசியலில் போராடினார். தனித்தும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டார். ஒரு கட்டத்தில் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார்.

கமல்ஹாசன்: ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி, குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றாலும், தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன்பின் திமுகவுடன் ஒரே ஒரு ராஜ்யசபா தொகுதிக்காக தன்னுடைய கட்சியை இணைத்து கொண்டார்.

சீமான்: ‘நாம் தமிழர் கட்சி’ என்ற கட்சியைத் தொடங்கி, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு தேசியவாத அரசியலை முன்வைத்துள்ளார். ஆனால், தேர்தல் வெற்றியை இன்னும் எட்டவில்லை.

எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜய்யா?

எம்.ஜி.ஆரைப் போல, விஜய்க்கும் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு உள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர்-ன் அரசியல் பாதை வேறு, விஜய்யின் பாதை வேறு. விஜய், எந்தவொரு திராவிட இயக்கத்தின் பின்புலமும் இல்லாமல், நேரடியாக அரசியலுக்கு வந்துள்ளார்.

விஜய்க்கு உள்ள பலம்:

இளைஞர்களின் ஆதரவு: இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவு விஜய்க்கு ஒரு பெரிய பலமாக உள்ளது.

நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு: உறுப்பினர் சேர்க்கை போன்ற அடிப்படை பணிகளிலேயே நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுகிறார்.

புதிய பார்வை: வயதானவர்கள் அரசியலை விட்டு விலகி, இளைஞர்கள் நாட்டை ஆள வேண்டும் என்ற அவரது பார்வை, பலரையும் ஈர்த்துள்ளது.

எம்.ஜி.ஆரைப் போல விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதை காலம் தான் தீர்மானிக்கும். ஆனால், அவர் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முயல்கிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இந்த அரசியல் மாற்றம், வருங்காலத்தில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.