மகாசிவராத்திரி வரும் 18.02.2023 அன்று வருகிறது. இந்த நன்னாள் எப்படி உருவானது என்று பார்ப்போமா…
மகாசிவராத்திரி ஆண்டுதோறும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் விரதம் இருந்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அத்தனையும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது ஐதீகம்.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டன. இதனால் அண்ட பிரம்மாண்ட உலகமும் திகைத்து செயலற்று முடங்கிப் போய் இருந்தது.
இந்த நிலையில் கருணையே உருவான அம்பிகை அண்ட பிரம்மாண்ட உலகம் மீண்டும் இயங்குவதற்கு கடுமையாகத் தவம் இருந்தார். 4 ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி சிவலிங்கத்தைத் தரிசித்து அர்ச்சனை செய்தார்.
பூஜையின் முடிவில் அம்பிகைக்கு பரமேஸ்வரன் காட்சி அளித்தார். ஈஸ்வரனை வணங்கிய அம்பிகை ஒரு வேண்டுகோள் விடுத்தார். இந்த நாளில் தேவர்களும், மனிதர்களும் தங்களைப் பூஜித்து தங்கள் திருநாமத்தினாலேயே சிவராத்திரியாகக் கொண்டாட வேண்டும் என்றார்.
அந்த சிவராத்திரி நாளில் சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை தோன்றும் வரை தங்களை வணங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் தந்தருள வேண்டும் என்றும் வேண்டினார்.
சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள்புரிந்தார். ஒருமுறை வேடன் ஒருவன் காட்டிற்குச் சென்றான். வெகுநேரமாக அலைந்து திரிந்து பார்த்தான். அவனுக்கு எந்த விலங்கும் சிக்கவில்லை. அப்போது நன்றாக இருட்டி விட்டது. அங்கு புலி ஒன்று வரவே அங்கிருந்த வில்வ மரத்தில் மளமளவென ஏறி மறைந்து கொண்டான்.
அந்தப் புலியோ அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. மரத்தில் தூங்கிவிட்டால் கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுவோமே என்று பயந்து இரவு முழுவதும் கண்விழித்தபடி இருந்தான். அப்படி இருக்கணும்னா தூக்கம் வரக்கூடாது என நினைத்து அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தான்.
உடனே அந்த மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டுக்கொண்டே இருந்தான்.
அந்த இலைகள் எல்லாம் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. மேலும் அன்றைய தினம் சிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் கண்விழித்துப் பூஜித்த பலனையும் தன்னை அறியாமலேயே அந்த வேடன் பெற்றான். அதன் காரணமாக அந்த வேடனுக்கு முக்தி அளித்து மோட்சத்தையும் அருளினார் சிவபெருமான்.
சிவராத்திரி அன்று 4 கால பூஜை செய்யப்படும். முதல் கால பூஜையில் பஞ்சகவ்யம். 2ம் கால பூஜையில் பால், பஞ்சாமிர்தம். 3ம் கால பூஜையில், பழச்சாறுகள். 4ம் காலத்தில் சந்தன அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
சிவராத்திரி அன்று எல்லா சிவாலயங்களிலும் சிவனைத் தரிசிப்பது விசேஷம். ஆனாலும் சிவராத்திரி மகிமையால் உண்டான சப்தவிடங்க தலங்கள், 12 ஜோதிர் லிங்க தலங்கள், பஞ்சபூத தலங்கள், பஞ்ச ஆரண்ய தலங்களுக்குச் சென்று வழிபடுவது விசேஷம்.
முடிந்த வரையில் இன்று வில்வ இலைகளால் சிவனை அர்ச்சிக்க வேண்டும். அதனையே பிரசாதமாகவும் பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால் சுபிட்சம் உண்டாகும்.