இத்தனை வருஷமா இலங்கை தமிழ் சொந்தங்கள் அங்க தலைவன் இல்லாம, தகுந்த உரிமை இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இப்போ அவங்க கூப்பிடுறது வெறும் சினிமா நடிகனை இல்லை… அவங்களோட விடிவுகாலமா வரப்போற ஒரு அரசியல் சக்தியை! அங்க இருக்குற துரோக அரசியல் சாம்ராஜ்யத்தை வேரறுக்க… இந்த தவெக-வோட கொடி சீக்கிரமே கடல் தாண்டியும் பறக்கும்டா!”

தமிழக அரசியல் களத்தில் குறுகிய காலத்திலேயே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சாதனை படைத்த ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியின் புகழ், தற்போது சர்வதேச…

tvk srilanka

தமிழக அரசியல் களத்தில் குறுகிய காலத்திலேயே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சாதனை படைத்த ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியின் புகழ், தற்போது சர்வதேச எல்லையிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது மட்டுமன்றி, அண்டை மாநிலமான புதுவையிலும் சில முக்கியத் தொகுதிகளைக் கைப்பற்றி தவெக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்குத் தென்னிந்திய மாநிலங்கள் முழுவதிலும் இருக்கும் அசாத்தியமான செல்வாக்கைப் பயன்படுத்தி, கட்சியின் எல்லையை மேலும் விரிவுபடுத்தும் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த அதிரடி அரசியல் நகர்வுகள் இந்திய அரசியலில் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளிலும் தற்போதைய பிரதான பேசுபொருளாக மாறியுள்ளன.

தென்னிந்தியாவில் தவெகவின் அரசியல் கால்தடத்தைப் பதிக்கும் நோக்கில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் கட்சியின் அதிகாரப்பூர்வக் கிளைகளைத் தொடங்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, முதலமைச்சர் விஜய்யின் தீவிர ஆதரவாளர்களாகவும் தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களாகவும் விளங்கும் ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ எனப்படும் சமூக வலைத்தளப் படையினர், அந்தந்த மாநிலங்களில் உள்ள ரசிகர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளில் இரவும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர். மிக விரைவில் இந்த நான்கு மாநிலங்களிலும் தமிழக வெற்றி கழகத்தின் கிளைகள் முறைப்படி தொடங்கப்பட்டு, கட்சியின் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சூழலில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு அண்டை நாடான இலங்கையிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும், அரசியல் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் என்பது உலகறிந்த விஷயமாகும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் மகனே விஜய் அவர்களின் தீவிர ரசிகர் என்பது அண்மைக் காலங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு முக்கியத் தகவலாகும். இலங்கைத் தீவின் தென்னகப் பகுதி முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வரை விஜய் என்ற பெயருக்கு இருக்கும் பிரம்மாண்ட ஈர்ப்பு, தற்போது வெறும் சினிமா ரசனையோடு நின்றுவிடாமல், அங்குள்ள மக்களின் அரசியல் எதிர்பார்ப்பாகவும் மாறத் தொடங்கியுள்ளது அங்குள்ள அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன் வெளிப்பாடாக, இலங்கைத் தமிழர்கள் தற்போது தங்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலமாக முதலமைச்சர் விஜய்க்கு மிக உருக்கமான மற்றும் ஆவேசமான கோரிக்கைகளை விடுக்கத் தொடங்கியுள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் கிளைகளை இலங்கையிலும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்க வேண்டும் என்று அங்குள்ள தமிழ் இளைஞர்களும் பொதுமக்களும் எக்ஸ் , முகநூல் போன்ற தளங்களில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா நாயகனாகக் கொண்டாடிய தங்களின் நல்வாழ்த்து நாயகன், இப்போதைய அரசியல் சூழலில் ஈழத் தமிழர்களின் உரிமைக் குரலாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு மாற்று அரசியல் சக்தியாகவும் மாற வேண்டும் என்பதே அவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அங்கிருந்து பகிரப்படும் சமூக வலைத்தளப் பதிவுகளில், “இலங்கையில் தமிழக வெற்றி கழகத்தின் கிளை தொடங்கப்பட்டு, வரவிருக்கும் தேர்தல்களில் தமிழர் வாழும் மாகாணங்களில் நமது கட்சி போட்டியிட வேண்டும்; அதன் மூலம் தவெகவைச் சேர்ந்த ஒரு நேர்மையான தமிழரே அங்குள்ள மாகாண சபையின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும்” என்று தங்களது அரசியல் கனவுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து வருகின்றனர். பல தசாப்தங்களாகத் தகுந்த அரசியல் தலைமை இல்லாமல், வாழ்வுரிமைகளை இழந்து தவிக்கும் தங்களுக்கு, தமிழகத்தில் சிஸ்டத்தை மாற்றிக் காட்டிய விஜய் அவர்களின் அரசியல் பாணி மட்டுமே விடிவுகாலமாக அமையும் என்று இலங்கைத் தமிழ் மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

தமிழக எல்லையைத் தாண்டி தென்னிந்தியா முழுவதும் கிளைகளைத் தொடங்கி, தேசிய அளவில் தவெகவை ஒரு முக்கிய சக்தியாக மாற்றத் திட்டமிட்டுள்ள முதலமைச்சர் விஜய், இலங்கைத் தமிழர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று அங்கு தனது கட்சியின் கிளையைத் தொடங்குவாரா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாகும். சர்வதேசச் சட்டதிட்டங்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வெளியுறவுக் கொள்கைகளுக்கு உட்பட்டு, இலங்கைத் தமிழர் பிரதேசங்களில் தனது கட்சியின் அரசியல் செல்வாக்கை அவர் எவ்வாறு நிலைநிறுத்தப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ, கடல்கடந்து ஒலிக்கும் இந்தக் கோரிக்கையானது, விஜய் என்ற தனிமனிதனின் அரசியல் ஆளுமை சர்வதேச அளவில் எந்த உயரத்தில் இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.