வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் வெடித்து பெரும் வன்முறையாக மாறிய நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி பிரதமரின் வீடு சூறையாடப்பட்டதாகவும் பிரதமரின் தந்தை சிலை அடித்து நொறுக்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் தற்காலிகமாக ராணுவம் ஆட்சியை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பாக வங்கதேச பிரதமரை கண்டித்து அவர் பதவி விலக வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று திடீரென மாணவர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்திற்குள் போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரதமரின் இல்லத்தில் இருந்த பொருட்களை சிலர் தூக்கிச் செல்லும் வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து விட்டதாகவும் அவர் இந்தியாவுக்கு தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ராணுவம் தற்காலிகமாக வங்கதேச அரசின் பொறுப்பை கையில் ஏற்று உள்ளதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டதாகவும் இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அவர் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து அவர் லண்டன் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் மாணவர்களின் போராட்டத்தை அடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.