வாரத்தின் கடைசி நாளான இன்று, பங்குச் சந்தை மிக மோசமாக இறங்கியதை அடுத்து, முதலீட்டாளர்களால் இன்று “கருப்பு நாள்” என்று கூறப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முதலே, பங்குச் சந்தை மிக மோசமாக சரிந்த நிலையில் இருந்தது. வர்த்தகம் முடியும் போது, சென்செக்ஸ் 1414 புள்ளிகள் சரிந்து, முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நிஃப்டி 420 புள்ளிகள் சரிந்துள்ளது.
இந்திய பங்குச் சந்தை மட்டும் இன்றி, அமெரிக்கா உட்பட உலகளாவிய பங்குச் சந்தைகளும் மிக மோசமாக சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தையில் செய்த முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றனர். அவர்கள் தங்களுடைய பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்வதே, இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, இன்று இந்திய பங்குச் சந்தைக்கு “கருப்பு தினம்” என்று கூறப்பட்டு வருகிறது. ஒரே நாளில் மொத்த சந்தை மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கைகள், அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றம், டிசம்பர் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளி விவரங்கள் ஆகியவை, இந்த பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணங்களாக பங்குச் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.