அவங்களும் மனுஷங்க தான்.. மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் டிரம்ப்.. “Waka Waka” புகழ் ஷகிரா கோரிக்கை..!

  கிராமி விருது வென்ற பாடகி ஷகிரா, அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அதற்குக் காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற…

 

கிராமி விருது வென்ற பாடகி ஷகிரா, அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அதற்குக் காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகள்தான்.

ஹாலிவுட் ரிப்போர்ட்டர் பத்திரிகைக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், கொலம்பியாவில் பிறந்து, இளம் வயதிலேயே இசையில் ஒரு வாழ்க்கையை தேடி மியாமிக்கு குடிபெயர்ந்த தனது அனுபவங்களை ஷகிரா பகிர்ந்து கொண்டார்.

48 வயதாகும் இந்த உலக புகழ்பெற்ற பாடகி, ஒருவரின் சட்டப்பூர்வ நிலையை பொருட்படுத்தாமல், அனைத்து மக்களையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பதை மிக முக்கியமாக வலியுறுத்தினார். “அமெரிக்காவில் இன்று ஒரு புலம்பெயர்ந்தவராக இருப்பது என்பது தொடர்ச்சியான பயத்திலேயே வாழ்வதற்கு சமம்” என்று அவர் வருத்தத்துடன் கூறினார். “இதைப் பார்ப்பது மிகவும் வேதனையாக இருப்பதாகவும், எந்த சோதனைகள் வந்தாலும், தங்கள் உரிமைகளுக்காக போராடி, ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றும் அவர் மக்களை வலியுறுத்தினார்.

நாடுகள் தங்களின் குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைக்கலாம் என்றாலும், மனிதர்களை நடத்தும் விதம் எப்போதும் மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும் என்று ஷகிரா அழுத்தமாக தெரிவித்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிற நகரங்களில், குடிவரவு அமலாக்கக் கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஷகிராவின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்னா கென்ட்ரிக், ஜூலியா லூயிஸ்-டிரேஃபஸ், கெர்ரி வாஷிங்டன் போன்ற ஹாலிவுட் பிரபலங்களும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜனநாயகம் மற்றும் நீதிக்காக குரல் கொடுத்துள்ளனர்.

ஷகிரா நீண்டகாலமாகவே புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் பெற்ற கிராமி விருதை, “இந்த நாட்டில் உள்ள எனது அனைத்து புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுக்கும்” அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.

மேலும், “நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள், உங்களுக்கு மதிப்பு இருக்கிறது, நான் எப்போதும் உங்களுக்காக போராடுவேன்” என்று உருக்கமாக கூறினார்.

2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக அவர் பாடிய “Waka Waka” (This Time for Africa)” பாடல் மிகவும் பிரபலமானது. மேலும், 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவிலும் ஷகிரா பங்கேற்றுப் பாடினார்.