கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, பலரது உயிரை பறித்ததோடு, பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. லண்டன் செல்லவிருந்த அந்த போயிங் விமானம், முதலில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி சிவில் மருத்துவமனையின் உணவக கட்டிடம் மீது மோதி, அதன் பிறகு மருத்துவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இந்த இரண்டு கட்டிடங்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டன.
விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் இருந்த ராஜு படேல் என்ற கட்டுமானத் தொழில் அதிபர். சம்பவ இடத்திற்கு முதலில் விரைந்தவர்களில் ஒருவர். அந்த சம்பவத்தை விவரித்த அவர் “முதல் 15-20 நிமிடங்கள், விமானத்தின் உடைந்த பாகங்களுக்கு அருகில் கூட எங்களால் செல்ல முடியவில்லை. எங்கள் குழுவிடம் காயமடைந்தவர்களை தூக்கி செல்ல ஸ்ட்ரெச்சர்கள் இல்லை. ஆனால், அவர்கள் தைரியத்தை இழக்கவில்லை. கிடைத்த சேலைகளையும், துணிகளையும் பயன்படுத்தி காயமடைந்தவர்களை தூக்கினோம். எங்களிடம் இருந்ததை வைத்துத்தான் பணியாற்றினோம். எப்படியாவது உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் எங்கள் மனதில் இருந்தது. முதல் தீயணைப்பு வண்டியும், 108 ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு வந்ததும், நாங்கள் மீட்புப் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டோம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.
சம்பவ இடத்தில் சிதறி கிடந்த பொருட்கள் குறித்து பேசிய ராஜு படேல், “எரிந்த பைகள், உடைந்த பொருட்கள் தரையில் பரவிக் கிடந்தன. அவற்றுக்கிடையே 70 பவுன் தங்க நகைகள், 80,000 ரூபாய் ரொக்கம், பல பாஸ்போர்ட்டுகள், ஒரு பகவத் கீதை புத்தகம் ஆகியவற்றை நாங்கள் மீட்டோம். இந்த எல்லாப் பொருட்களையும் உடனடியாக போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.
அதிகாரிகள், ராஜு படேலையும் அவரது குழுவினரையும் அவசர சேவைக் குழுவினர் பொறுப்பேற்கும் வரை, அதாவது இரவு 9 மணி வரை சம்பவ இடத்திலேயே இருக்குமாறு அனுமதித்தனர். அதன் பிறகு, ராஜு படேலின் குழு, உடைந்த பாகங்களுக்குள் மேலும் ஏதாவது இருக்கிறதா என்று தேடும் பணியை தொடங்கியது.
கடந்த 2008-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் போதும் ராஜு படேல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர். அந்த பயங்கர சம்பவத்தை நினைவுகூர்ந்து அவர், “அப்போது குண்டு வெடித்தபோது சிவில் மருத்துவமனையிலிருந்து வெறும் 100 மீட்டர் தூரத்தில்தான் நான் இருந்தேன். ஆனால் இந்த முறை ஏற்பட்ட பேரழிவு… இந்தத் தீ… இதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று மனம் உருகினார்.
ராஜு படேலையும் அவரது குழுவினரையும் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அவர்கள் இவர்களை “உண்மையான ஹீரோக்கள்” என்று அழைக்கிறார்கள். பல சமூக அமைப்புகளும் இவர்களது பங்களிப்பைப் பாராட்டி, எதிர்காலத்தில் அவசர சேவைகளில் இணையுமாறு ராஜு படேலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மீட்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்றும், அவை இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்தார். ராஜு படேல் போன்ற குடிமக்களின் சேவையை பாராட்டிய அவர், இதுபோன்ற அவசர காலங்களில் மக்களின் பங்கு மிகவும் விலைமதிப்பற்றது என்று குறிப்பிட்டார்.
பல இடங்களில் விபத்து நடந்தால் காயமடைந்தவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் கூட்டம் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் உயிர்களுக்கு முன் காசு பணம் தூசுக்கு சமம் என்ற எண்ணத்தில் செயல்பட்ட இந்த குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.