யுபிஐ மூலம் அன்றாடம் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளை செய்துவரும் மக்களுக்கு ஒரு அசத்தலான செய்தி என்னவெனில் NPCI என்ற தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் சில அதிரடி புதிய விதிகளை அறிவித்துள்ளது. இனி உங்கள் யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்தாலோ, அல்லது தவறுதலாக வேறு யுபிஐ ஐடிக்கு பணம் அனுப்பிவிட்டாலோ கவலைப்பட தேவையில்லை! அடுத்த நிமிடமே தவறுகள் சரி செய்யப்படும்.
பணம் திரும்ப வர இனி காத்திருக்க வேண்டாம்!
ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரும் புதிய விதிப்படி, ஒரு யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து, உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தால், அந்த பணம் உங்களுக்கு உடனடியாக திரும்பப் பெற்றுத்தரப்படும். ஆம், இனி உங்கள் பணத்தை திரும்ப பெற நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை!
தவறான ஐடிக்கு அனுப்பிய பணத்தையும் மீட்டெடுக்கலாம்!
அவசரத்தில் தவறுதலாக வேறு யுபிஐ ஐடிக்கு பணம் அனுப்பிவிட்டீர்களா? இனி அந்த பணத்தை உங்கள் வங்கி மூலம் திரும்ப பெற முடியும்! புதிய வழிகாட்டுதலின்படி, NPCI-யின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், வங்கிகள் இப்போது நிராகரிக்கப்பட்ட ‘சார்ஜ்பேக்’ (Chargeback) கோரிக்கைகளை அங்கீகரிக்க முடியும். மோசடி நடந்தாலோ, பரிவர்த்தனை தோல்வியுற்றாலோ, அல்லது வணிகர் புகார்கள் போன்ற நிலைகளிலும் இது பொருந்தும்.
முன்பு இருந்த சிக்கல் இனி இல்லை!
முன்பு, ஒரு ‘சார்ஜ்பேக்’ கோரிக்கை பலமுறை நிராகரிக்கப்பட்டால், NPCI-யின் சிஸ்டம் தானாகவே அடுத்தடுத்த முயற்சிகளை தடுத்துவிடும். அப்போது வங்கிகள், அந்த கோரிக்கையை மீண்டும் அனுமதிக்க NPCI-யை கைமுறையாக அணுக வேண்டும். இதனால் நேரம் விரயமாவதோடு, தீர்வும் தாமதமானது.
இப்போது என்ன மாற்றம்?
இந்தச் சிக்கலுக்கு தீர்வாக, NPCI ஒரு புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் RGNB (Remitting Bank Raising Good Faith Negative Chargeback). இந்த புதிய அமைப்பு, வங்கியின் உள் விசாரணையில் வாடிக்கையாளர் தரப்பு சரியென உறுதிப்படுத்தப்பட்டால், ஏற்கனவே இருந்த தடைகளை நீக்கி, பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
தவறாகப் பயன்படுத்தக் கூடாது – NPCI எச்சரிக்கை!
இந்த புதிய வசதியை அபராதங்கள் அல்லது இழப்பீடுகளை தவிர்ப்பதற்காக வங்கிகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என NPCI தெளிவாக எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட ‘சார்ஜ்பேக்’ வழக்குகளில் மட்டுமே RGNB பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதி ஏன் இவ்வளவு முக்கியம்?
மே 2025 நிலவரப்படி, யுபிஐ மூலம் 11.4 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்த புதிய விதி, அங்கீகரிக்கப்படாத அல்லது தவறான பரிவர்த்தனைகளால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான பயனர்களுக்குப் பெரும் நிவாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.