ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு.. என்ன நடக்குது இந்திய பங்குச்சந்தையில்?

By Bala Siva

Published:

நேற்று இந்திய பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்து, முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்து வந்த நிலையில், முதலீட்டாளர்கள் நல்ல லாபம் பார்த்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக, அமெரிக்காவில் பெடரல் வங்கி வட்டி விகித மாற்றத்தை அறிவித்த பின்னர் பங்குச்சந்தை ஏறியது.

இந்த நிலையில், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் சீன அரசு சலுகை திட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. அதுமட்டுமின்றி சீன மத்திய வங்கியும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க திட்டமிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதனை அடுத்து, முதலீட்டாளர்களின் கவனம் சீன சந்தை பக்கம் திரும்பியதால், இந்திய பங்குச் சந்தை உட்பட பல நாடுகளின் பங்குச் சந்தைகள் மிக மோசமாக சரிந்தன.

நேற்றைய பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பிஐ, ஐடிசி,  போன்ற பங்குகள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதுடன், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எப்.சி வங்கியின் பங்குகள் மிக மோசமாக சரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய பங்குச்சந்தை முடிவில், சென்செக்ஸ் 1272 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்ததாகவும், நிப்டி 368 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.