புனே அருகே உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் என்ற பகுதியில் போலிச் சாமியார் ஒருவர் மாந்திரீகம் செய்து, மக்களை ஏமாற்றி, மொபைல் போன் ரிமோட் ஆக்சஸ் செயலி மூலம் ரகசியமாக பக்தர்களின் பாலியல் உறவுகளை நேரலையில் பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கைதான போலிச்சாமியார் தனது ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களை அவர்களது மொபைல் போன்களில் ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்க சொல்லுவார். இதன் மூலம் அவர்களது போன்கள் மூலம் அவர்கள் என்ன செய்கிறார் என்பதை நேரலையாக பார்க்கும் அனுமதியை அவர் பெறுவார். பின்னர், அவர் தனது பக்தர்களை அவர்களது மனைவியுடனோ அல்லது பாலியல் தொழிலாளர்கள் உட்பட வேறு பெண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு கேட்டு கொண்டு அவ்வாறு செய்யும்போது செல்போனை ஆன செய்ய அறிவுறுத்தியுள்ளார். பின்னர் அவர் தனது போனில் ரகசியமாக நேரலையில் அந்த செயலி மூலம் பக்தர்களின் பாலியல் உறவுகளை பார்த்துள்ளார்.
அந்த செயலி மூலம் அவர்களது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்க முடிந்தால்தான் அவர்களது கிரகங்களில் உள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு அதற்கு தீர்வு காண முடியும் என்று கூறி தன்னிடம் வரும் பக்தர்களை ஏமாற்றியுள்ளார். பக்தர்களும் அப்பாவியாக பாலியல் உறவில் ஈடுபடும்போது போனை ஆன் செய்த நிலையில், அவர்களது பாலியல் நடவடிக்கைகளை நேரலையில் சாமியார் பார்த்து ரசித்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சாமியார் பக்தர்களிடம் பதிவிறக்கம் செய்ய சொன்ன செயலி குறித்து காவல்துறை இதுவரை எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.
“இதுவரை போலிச்சாமியார் மீது நான்கு பேர் புகார் அளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்பாட்டு முறையை கண்டறியவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். கடந்த காலத்தில் இந்த குற்றம் சாட்டப்பட்டவரால் ஏமாற்றப்பட்டவர்கள் முன்வந்து போலீஸில் புகார் அளிக்குமாறு காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.