யூடியூப் வீடியோவை லைக் செய்த பெண் டாக்டருக்கு ரூ.23 லட்சம் இழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

Published:

யூடியூப் வீடியோவை லைக் செய்த பெண் டாக்டருக்கு 23 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் வேலை என்று கூறி பணத்தை மோசடி செய்யும் கும்பல் விதவிதமான மோசடிகளை செய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் யூடியூப் வீடியோவை லைக் செய்தால் வீட்டில் இருந்து ஏராளமாக பணம் சம்பாதிக்கலாம் என பெண் டாக்டர் ஒருவருக்கு மோசடியாளர் நம்பிக்கை அளித்துள்ளார்.

புனேவை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் விளம்பரத்தில் யூடியூப் வீடியோவை லைக் செய்தால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று பார்த்தார். இதனை அடுத்து அதில் கொடுக்கப்பட்ட எண்ணை தொடர்பு கொண்ட போது மிகவும் எளிதான பணி என்றும் ஆனால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து அவருக்கு என ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்யப்பட்டு ஒரு சில யூடியூப் வீடியோக்களை லைக் செய்ய வேண்டும் என்ற பணி கொடுக்கப்பட்டது.

ஒரு வாரத்தில் அவர் செய்த பணிக்கு ரூபாய் 10 ஆயிரத்து 275 சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து மிகவும் எளிய வேலைக்கு பத்தாயிரமா என்று ஆச்சரியப்பட்ட அந்த டாக்டர் அந்த பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவரை தொடர்பு கொண்ட அந்த மோசடியாளர்கள் தங்களது நிறுவனத்தின் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இருமடங்கு பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.

ஒரே வாரத்தில் பத்தாயிரம் வருமானம் கொடுத்ததால் அந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்ட அந்த பெண் டாக்டர் தனது வங்கி கணக்கில் உள்ள 23 லட்சத்தை கிரிப்டோகரன்சிக்காக முதலீடு செய்தார். ஆனால் ஒரு சில மாதங்கள் கழித்து எனது பணத்தை திரும்ப எடுக்கும் போது தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதனை அடுத்து அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...